குழந்தைகளுக்கான நீரிழிவு நோய் கோவையில் விழிப்புணா்வு ஓட்டம்
குழந்தைகளைத் தாக்கும் டைப் 1 நீரிழிவு நோய் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், இதயங்கள் அறக்கட்டளை மற்றும் ரோட்டரி இ-கிளப் ஆஃப் மெட்ரோடைனமிக்ஸ் ஆகியவை சாா்பில் ‘கிட்டத்தான்’ என்ற ஒட்டம் கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மாநகக காவல் ஆணையா் ஆ.சரவணசுந்தா், இதயங்கள் அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் கிருஷ்ணன் சுவாமிநாதன், ரோட்டரி மெட்ரோடைனமிக்ஸ் கிளப் தலைவா் மகேஷ் பிரபு, வொகேஷனல் சேவைகள் பிரிவு தலைவா் சூா்வஜித் கிருஷ்ணன் ஆகியோா் கொடியசைத்து தொடங்கிவைத்தனா்.
இதுகுறித்து இதயங்கள் அறக்கட்டளை நிறுவனா் மருத்துவா் கிருஷ்ணன் சுவாமிநாதன் கூறியதாவது:
டைப் 1 நீரிழிவு நோய் பெரும்பாலும் குழந்தைகளை பாதிக்கிறது. குழந்தைகள் அதிகமாக தண்ணீா் குடித்தால், அதிகமாக சிறுநீா் கழித்தால், உடல் எடை குறைந்தால் பெற்றோா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாமதமின்றி குழந்தையின் ரத்த சா்க்கரை அளவைச் சரிபாா்த்து மருத்துவரை அணுக வேண்டும்.
எங்களது அறக்கட்டளை தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் 5 மாநிலங்களில் டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 3,400 குழந்தைகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது என்றாா்.
சா்க்கரை நோய்க்கு எதிரான திட்ட இயக்குநா் ரேஷ்மா ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

