

நீரிழிவு நோய் பாதிப்பால் இந்தியாவுக்கு மிகப்பெரிய பொருளாதார சுமை ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தரவுகளின்படி 10 கோடிக்கும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 13 கோடி பேர் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சத்தமில்லாமல் ஒரு சுகாதார அவசரநிலை உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்த நீரிழிவு நோய் பாதிப்பால் இந்தியா இரண்டாவது அதிகபட்ச பொருளாதாரச் சுமையை எதிர்கொள்கிறது. அதாவது நீரிழிவு நோய்க்கு செலவிடுவதில் உலகளவில் இந்தியா 2 ஆம் இடத்தில் இருக்கிறது.
நீரிழிவு நோய் சிகிச்சைகளுக்கு இந்தியா 11.4 டிரில்லியன் டாலர் செலவு செய்கிறது. இந்திய மதிப்பில் ரூ. 1,048 லட்சம் கோடி ஆகும். அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நீரிழிவு நோயாளிகள் மொத்தமாக 16.5 டிரில்லியன் டாலர் (ரூ. 1,517 லட்சம் கோடி) என்ற அதிகபட்ச செலவை எதிர்கொள்கிறார்கள்.
மூன்றாவது இடத்தில் சீனா 11 டிரில்லியன் டாலர் (ரூ. 1,011 லட்சம் கோடி) செலவு செய்கிறது.
சர்வதேச பயன்பாட்டு அமைப்புகள் பகுப்பாய்வு நிறுவனம், ஆஸ்திரியாவில் உள்ள வியன்னா பொருளாதாரம் மற்றும் வணிகப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், 2020 முதல் 2050 வரை 204 நாடுகளில் நீரிழிவு நோயின் பொருளாதாரத் தாக்கத்தைக் கணக்கிட்டு ஆய்வின் முடிவுகளை 'நேச்சர் மெடிசின்' இதழில் வெளியிட்டுள்ளனர்.
ஒருவருக்கு அவரின் குடும்ப உறுப்பினர்களால் வழங்கப்படும் கவனிப்பைத் தவிர்த்து நீரிழிவு நோய்க்கு உலகளாவிய செலவு சுமார் 10 டிரில்லியன் டாலர் (ரூ. 919 லட்சம் கோடி). இது உலகின் ஓராண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 0.2% ஆகும். குடும்ப உறுப்பினர்களின் முறைசாரா கவனிப்பையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் செலவு 152 டிரில்லியன் டாலர் (ரூ. 13,985 லட்சம் கோடி) வரை அல்லது உலகின் ஓராண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7% வரை இருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
நீரிழிவு நோய் பரவும் விகிதம், இறப்பு விகிதத்தைவிட 30-50 மடங்கு அதிகமாக இருக்கிறது. அதனாலே நீரிழிவு நோய் சிகிச்சைக்கு அதிகம் செலவிட நேரிடுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா மற்றும் சீனாவைப் பொருத்தவரை, நீரிழிவு நோயின் அதிக பொருளாதாரச் செலவுகளுக்கு அங்குள்ள அதிக மக்கள்தொகையே காரணம். அதிக எண்ணிக்கையிலான மக்கள்தொகையால் பாதிப்பும் அதிகமாக இருக்கிறது. எனினும் அமெரிக்காவில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு அதிகம் செலவிடப்படுகிறது.
உயர் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு இடையேயான ஒரு முக்கிய வேறுபாடு, இதன் சிகிச்சைச் செலவு, பாதிப்பால் ஏற்படும் வேலையிழப்பு, வருமானம் இழப்பு ஆகும். உயர் வருமானம் கொண்ட நாடுகளுக்குப் பொருளாதாரச் சுமையில் 41% ஆகவும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு 14% ஆகவும் உள்ளது.
"நீரிழிவு போன்ற நாள்பட்ட நோய்களுக்கான மருத்துவ சிகிச்சை முறைகள், உயர் வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள மக்கள் எளிதாக அணுகுகின்றனர். அல்சைமர்(மறதி) அல்லது புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புடன் ஒப்பிடும்போது, நீரிழிவு நோயின் பொருளாதாரத் தாக்கம் மிக அதிகமாக உள்ளது" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
என்ன செய்வது?
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பது, அதாவது வழக்கமான உடல் செயல்பாடு, சமச்சீர் உணவு, சுற்றுச்சூழல் ஆகியவை நீரிழிவு நோயைத் தடுக்கவும் அதன் பொருளாதாரத் தாக்கத்தைக் குறைக்கவும் உதவும் என்று தெரிவித்தனர்.
வீட்டில் ஏற்கெனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களின் சந்ததிகள் குறிப்பிட்ட வயதுக்கு மேலே அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்வது நல்லது. முன்கூட்டியே ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலமாகவும் தொடர்ந்து சரியான சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலமாகவும் சரி செய்ய முடியும், இத்துடன் சரியான வாழ்க்கை முறையும் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
2024 நவம்பரில் 'தி லான்செட்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உலகின் நீரிழிவு நோயாளிகளில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் இந்தியர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தமில்லாமல் இந்தியாவில் நீரிழிவு பாதிப்புகள் அதிகரித்து வருவதாகவும் இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதுடன் பரிசோதனைகளை அரசுகள் ஊக்கப்படுத்த வேண்டும் என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.