நோயெதிர்ப்பு சக்தி! ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!
ANI

நோயெதிர்ப்பு சக்தி! ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று சந்தைகளில் விற்கப்படும் தயாரிப்புகள் பற்றி...
Published on

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்கள் என சந்தைகளில், குறிப்பாக ஆன்லைனில் விற்பனை செய்வது அதிகரித்து வருவது கவலைக்குரியது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உடலில் நோயெதிர்ப்பு சக்தி இல்லாமல்தான் உடல் சமநிலையை இழந்து பல்வேறு உடல் பாதிப்புகள், நோய்கள் ஏற்படுகின்றன. உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பல்வேறு வகை மூலிகைகளால், மருந்துகளால் செயற்கையாக தயாரிக்கப்பட்ட பொருள்கள் சந்தையில் அதிகம் விற்பனையாகின்றன.

IANS

இந்த தயாரிப்புகளில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின்கள் சி, டி, துத்தநாகம் உள்ளிட்டவை இருப்பதாகவும் இதனை சாப்பிடும்பட்சத்தில் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. அண்மைக் காலங்களில் ஆன்லைன் மூலமாக இந்த பொருள்கள் விற்பனையாகின்றன. சமூக ஊடகங்களில் முக்கிய பிரபலங்கள், அதிகம் ஃபாலோயர்ஸ்களைக் கொண்டுள்ள இன்ஃப்ளூயன்சர்கள் இதனை விளம்பரப்படுத்தும்போது பலரும் அதை நம்பி வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இது முற்றிலும் தவறான வழிமுறை என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

அதாவது மருந்தகங்களிலும் ஆன்லைன் தளங்களிலும் மாத்திரைகள், திரவ மருந்துகள், மூலிகைப் பொடிகள், கலவைகள் என்ற பெயரில் நோயெதிர்ப்பு பொருள்கள் என்று கூறி விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது. இதில் பெரிதாக நம்பகத்தன்மை இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு அமைப்பு என்பது சிக்கலான வலையமைப்பு. அது எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டியதாகும். தன்னிச்சையாக செயல்படும் இந்த நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுவது நாள்பட்ட அழற்சி அல்லது ஆட்டோ இம்யூன் எனும் தன்னுடல் தாக்க நோய்கள் போன்ற எதிர்பாராத விளைவுகளுக்கு வழிவகுக்கும். இந்த வகை நோய்களில் உடல் தனது உடலில் உள்ள திசுக்களையே தாக்கத் தொடங்குகிறது. இதனால் நீரிழிவு, தைராய்டு முதல் கால்களில் வீக்கம், சரும அழற்சி வரை பல பாதிப்புகள் ஏற்படலாம்.

கொச்சி 'கேர்' மருத்துவமனையின் இயக்குநரும் வாத நோய் நிபுணருமான டாக்டர் பத்மநாப ஷெனாய், 'சந்தையில் விற்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்கள் என்ற கூற்றுகள் 99% போலியானவை. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எந்த ஒரு சஞ்சீவ நிவாரணியும் இல்லை. அதாவது அனைத்து நோய்களுக்குமான ஒரே மருந்து என்று எதுவும் இல்லை என்று கூறுகிறார்.

ENS

"நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவும் ஊட்டச்சத்துகளில் ஒன்று வைட்டமின் டி, இது நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மக்கள் அதை உட்கொள்ளும் விதத்தில்தான் சிக்கல் இருக்கிறது. வைட்டமின் டி மாத்திரைகள், மருந்துகளை மருந்தகங்களில் வாங்கி பலரும் பயன்படுத்துகின்றனர். வைட்டமின் டி அதிகளவில் எடுத்துக்கொள்ளும்போது ​​அது உடலில் சேமிக்கத் தொடங்கிவிடுகிறது. ஒரு மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளும் வைட்டமின் டி டோஸ் பெரிதாக பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் அடிக்கடி அல்லது அதிக அளவு எடுத்துக்கொள்வது உடலில் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்" என்று டாக்டர் ஷெனாய் கூறுகிறார்.

அதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று விரைவான தீர்வுகளைத் தேடுவதற்கு பதிலாக அதற்கான உணவுப்பழக்கவழக்கம், வாழ்க்கைமுறையை மாற்றுவதன் மூலமாக பெற முடியும் என்று அறிவுறுத்துகிறார்.

அதாவது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த சமச்சீரான உணவு, லேசான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்தத்தை நிர்வகிப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீங்கு விளைவிக்கும் பழக்கங்களைத் தவிர்ப்பது ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க உதவும் எனவும் இயற்கையான முறையில் உடல் சமநிலையை நிர்வகிக்கும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

ஒரு மாத்திரை அல்லது ஒரு டானிக் மூலமாக ஒரேநாளில் உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பை மாற்றியமைக்க முடியாது என்பதை மக்கள் மனதில்கொள்ள வேண்டும். அதனை உணவு முறைகள், வாழ்க்கை முறைகள் மூலமாக இயற்கையான முறையில் படிப்படியாக அதிகரிக்க வேண்டுமே தவிர அதனை மருந்துகள் மூலமாக திடீரென தூண்டுவது பல்வேறு உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கும் டாக்டர் ஷெனாய், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்கள் பெரும்பாலும் மருத்துவ உலகில் விளம்பரமும் வியாபாரமும்தான் என்றும் கூறுகிறார்.

ENS

வாழ்க்கை முறை மாற்றங்கள்

தூக்கம்: நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஓய்வு கொடுக்கவும் சமநிலையில் வைக்கவும் அதில் உள்ள சிக்கல்களை சரிசெய்யவும் நாள் ஒன்றுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் அவசியம்.

மன அழுத்தம்: மன அழுத்தமே இன்று பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது. மன அழுத்தம் தொடர்ந்து இருப்பது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகிறது. இதனைச் சரிசெய்ய தியானம், யோகா ஆகியவற்றை முயற்சிக்கலாம்.

உடற்பயிற்சி: தினமும் மிதமான உடல் செயல்பாடு அவசியம். தினமும் அரை மணி நேரமாவது நடக்க வேண்டும், லேசான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். இது உடலில் ரத்த ஓட்டம், நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

தண்ணீர் குடித்தல்: உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அவரவரின் தேவைக்கேற்ப தண்ணீர் குடிக்கலாம். நாளொன்றுக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் அருந்த வேண்டும்.

சுகாதாரம்: உடலில் கிருமிகள் நுழைவதைத் தடுக்க அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கைகள் மூலமாகவே பல்வேறு தொற்றுகள் ஏற்படுகின்றன.

IANS

உணவுகள்

ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் ஆகியவற்றை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சர்க்கரை நிறைந்த உணவுகள், கொழுப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரை தவிர்த்துவிட வேண்டும்.

குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் தயிர் போன்ற புரோபயாடிக் உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

இவற்றின் மூலமாக உடலில் இயற்கையான முறையில் படிப்படியாக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

Summary

Don’t fall for ‘immunity booster’ products, focus on lifestyle changes to stay healthy

நோயெதிர்ப்பு சக்தி! ஆன்லைனில் விற்கும் இந்த தயாரிப்புகளை வாங்க வேண்டாம்!
சருமம் வறண்டு போவதற்கான காரணம் இதுதான்! மாய்ஸ்சரைசரை இப்படி பயன்படுத்துங்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com