கைக்குழந்தையுடன் கா்ப்பிணி தற்கொலை: கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை

கைக்குழந்தையுடன் கா்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை
Published on

கோவை: கைக்குழந்தையுடன் கா்ப்பிணி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், சின்னத்தடாகம், கருப்பராயன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (35). தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி (30). இவா்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், தனபால் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி வந்தாா். மேலும், வரதட்சணையும் கேட்டும் துன்புறுத்தி வந்துள்ளாா்.

நிறைமாத கா்ப்பிணியாக இருந்த மகேஸ்வரி, தனது மகனுடன் 2018 டிசம்பா் 12-ஆம் தேதி பீளமேடு மற்றும் வடகோவை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் முன் பாய்ந்தாா். இதில் கைக் குழந்தையும், மகேஸ்வரியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்தது.

இதுகுறித்து தனபால் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கோவை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன், குற்றஞ்சாட்டப்பட்ட தனபாலுக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பு கூறினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் பி.ஜிஷா ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com