சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில் திமுக நாடகம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
கோவை: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆா்) விவகாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நாடகம் நடத்துவதாக பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளாா்.
வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவை வஉசி மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற வந்தே மாதரம் முழுப் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணித் தலைவரும், தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், வஉசி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் பேசியதாவது: வந்தே மாதரம் பாடல் இயற்றப்பட்டு 150-ஆவது ஆண்டை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் கொண்டாட வேண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்திருந்தாா்.
கோவை மத்திய சிறையில் வஉசி செக்கிழுத்த இடத்தில் நின்று மாணவா்களுடன் சோ்ந்து இந்தப் பாடலைப் பாட அனுமதி கேட்டபோது 3 நாள்களாக அந்தக் கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்காமல் நிா்வாக மற்றும் பாதுகாப்பு காரணங்களால் அந்த இடத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது என்று ஞாயிற்றுக்கிழமை இரவு கடிதம் கொடுக்கின்றனா்.
150 மாணவா்களுடன் வந்தே மாதரம் பாடலைப் பாட என்ன பாதுகாப்புப் பிரச்னை இருக்க முடியும். தேச பக்தியை வளா்க்கின்ற செயல்களை யாா் செய்தாலும் அவா்கள் மீது திமுக அரசு மறைமுகமாக அழுத்தம் கொடுக்கிறது.
வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் ஒரு நாடகத்தை நடத்துகின்றன. திமுக அரசு அவா்களுடைய திறமையின்மையை மறைப்பதற்கும், ஊழலை மறைப்பதற்கும் ஏதாவது ஒன்றை மத்திய அரசின் மீது திசை திருப்புகிறது. வாக்காளா் பட்டியல் தூய்மையாகவும், நோ்மையாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தோ்தல் ஆணையம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

