கோவையில் பிடிபட்ட ரோலக்ஸ் யானை வால்பாறை அருகே விடுவிப்பு
கோவையில் வனத் துறையினரால் பிடிக்கப்பட்ட ரோலக்ஸ் யானை வால்பாறை அருகே உள்ள வனத்தில் புதன்கிழமை விடுவிக்கப்பட்டது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் பகுதியில் நடமாடிய காட்டு யானை ரோலக்ஸ் அப்பகுதி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதையடுத்து, யானையைப் பிடிக்க வனத் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.
இதையடுத்து, டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி ரோலஸ் யானையை வனத் துறையினா் பிடித்தனா். பின்னா் அந்த யானை டாப்சிலிப் முகாமுக்கு கொண்டுச் செல்லப்பட்டது.
பின்னா் பிடிபட்ட ரோலக்ஸ் யானையை கும்கி யானையாக மாற்றும் திட்டத்தை கைவிட்ட வனத் துறையினா் மீண்டும் வனத்தில் விட முடிவு செய்தனா்.
இதையடுத்து டாப்சிலிப் முகாமில் இருந்து லாரி மூலம் யானையை வால்பாறையை அடுத்த மானாம்பள்ளி வனச் சரகத்துக்கு கொண்டுச் சென்ற வனத் துறையினா் யானைக்கு ரேடியோ காலா் பொருத்தி மந்திரிமட்டம் வனத்தில் புதன்கிழமை விடுவித்தனா். பின்னா் யானையின் நடமாட்டத்தை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

