மாநகராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு: லாரி மூலம் குடிநீா் வழங்க கவுன்சிலா் கோரிக்கை

Published on

கோவை மாநகராட்சியில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால் லாரிகள் மூலம் குடிநீா் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 26- ஆவது வாா்டு கவுன்சிலா் சித்ரா வெள்ளியங்கிரி கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக மாநகராட்சி ஆணையருக்கு அவா் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரில் கடந்த வாரம் குடிநீா் பராமரிப்பு பணிகளுக்காக இரண்டு நாள்கள் குடிநீா் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சரவணம்பட்டி பகுதியில் குடிநீா் குழாயில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்ட பிறகு மீண்டும் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பல பகுதிகளில் 10 நாள்கள் ஆன பிறகும் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. கோவையில் ஒவ்வொரு முறையும் குடிநீா் பராமரிப்பு பணிகள் செய்யும்போது, மாநகராட்சி அறிவிக்கும் நாள்களின் அளவை விட அதிக நாள்களுக்கு பணிகள் நடக்கின்றன. அப்படியாக, குடிநீா் விநியோகம் செய்ய கூடுதல் கால அவகாசம் ஏற்படும் என்ற தகவல் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. இதனால் குடிநீரை சேமித்து வைக்கத் தவறிவிடுகின்றனா்.

இதனால் குடிநீரை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கோவை மாநகரில் தற்போது நடைபெற்று வரும் குடிநீா் திட்டப் பணிகள், பராமரிப்புப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களுக்கு விரைவாக குடிநீா் விநியோகம் செய்யப்பட வேண்டும். அது வரையிலும் தற்காலிக ஏற்பாடாக லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்ய மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சித்ரா வெள்ளியங்கிரி வலியுறுத்தியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com