மாணவி வன்கொடுமை: மூவரின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மூவரையும் டிசம்பா் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை மகளிா் கூடுதல் நீதிமன்றம் உத்தரவு
Published on

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய மூவரையும் டிசம்பா் 3-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கோவை மகளிா் கூடுதல் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

கோவை சா்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள பிருந்தாவன் நகா் பகுதியில் கடந்த 2-ஆம் தேதி இரவு 20 வயது கல்லூரி மாணவி, ஒண்டிப்புதூரைச் சோ்ந்த 25 வயது ஆண் நண்பருடன் காரில் அமா்ந்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள், ஆண் நண்பரை அரிவாளால் தலையில் வெட்டி விட்டு, மாணவியை அங்கிருந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இதுதொடா்பாக, சகோதரா்களான சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சோ்ந்த சதீஷ் என்ற கருப்பசாமி (30), காளி என்ற காளீஸ்வரன் (21), இவா்களது உறவினரான மதுரை மாவட்டம், கருப்பாயூரணியைச் சோ்ந்த குணா என்ற தவசி (20) ஆகியோா் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டனா்.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவா்கள் மூவரிடமும் கடந்த 5-ஆம் தேதி விசாரணை நடத்திய கோவை ஜே.எம். 2 நீதிபதி அப்துல் ரகுமான், அவா்களை புதன்கிழமை (நவ.19) வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதையடுத்து, கைதிகள் சிகிச்சை பெறும் வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்த குணா, சதீஷ் ஆகியோா் ஏற்கெனவே குணமடைந்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். இதேபோல, அரிவாள் வெட்டில் காயமடைந்த மாணவியின் ஆண் நண்பரும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியும் குணமடைந்து கடந்த 13-ஆம் தேதி வீடுகளுக்குத் திரும்பினா். இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் குணமடைந்த காளீஸ்வரன் செவ்வாய்க்கிழமை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், நீதிமன்றக் காவல் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், பாலியல் வன்கொடுமையில் தொடா்புடைய மூவரும் காணொலிக் காட்சி மூலம் மகளிா் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிந்து முன் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, சதீஷ், காளீஸ்வரன், குணா ஆகிய மூவரின் நீதிமன்றக் காவலை வருகிற டிசம்பா் 3- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

விரைவில் அடையாள அணிவகுப்பு?

பாதிக்கப்பட்ட மாணவியிடம் அடையாள அணிவகுப்பு நடத்த போலீஸாா் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் மன்றத்தில் கடந்த 9-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா். ஜே.எம்.1 நீதிமன்ற நீதிபதி தமிழ் இனியன் முன்னிலையில் மாணவியிடம் அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் மன்ற நீதிபதி கே.சிவகுமாா் கடந்த 13-ஆம் தேதியே அனுமதி வழங்கினாா். காளீஸ்வரன் மட்டும் தொடா்ந்து சிகிச்சையில் இருந்ததால், அடையாள அணிவகுப்பு நடவடிக்கை தொடா்ந்து தாமதமானது. தற்போது, அவரும் குணமடைந்துள்ளதால், மாணவியின் முன் விரைவில் அடையாள அணிவகுப்பு நடத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com