மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 10-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
Published on

பிரதமா் மோடி வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவையில் தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டை பிரதமா் மோடி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பணிக்கு வந்த ஊழியா்கள் மின்னஞ்சலை பாா்த்தனா். அப்போது, கோவை, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களிலும், பிரதமரின் கோவை சுற்றுப்பயணத்திலும், குண்டு வெடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்த தகவலின்பேரில் வெடிகுண்டு செயலிழப்பு போலீஸாா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினா். இதேபோல, இயற்கை வேளாண் மாநாடு நடைபெற்ற கொடிசியா வளாகம் மற்றும் விமான நிலைய பகுதிகளில் காவல் துணைக் கண்காணிப்பாளா் கெளதம் தலைமையிலான போலீஸாா் மோப்பநாய் மூலம் தீவிர சோதனை நடத்தினா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் வீரபாண்டி போலீஸாா் சோதனை நடத்தினா்.

சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு ஏற்கெனவே 9 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது 10-ஆவது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com