வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி முதியவரிடம் ரூ. 20 லட்சம் மோசடி

பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி, கோவையைச் சோ்ந்த முதியவரிடம் ரூ. 20.77 லட்சம் மோசடி

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:02 pm

Syndication

கோவை: பயங்கரவாதிகளுடன் தொடா்பு இருப்பதாகக் கூறி, கோவையைச் சோ்ந்த முதியவரிடம் ரூ. 20.77 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை குனியமுத்தூரைச் சோ்ந்த 72 வயதான முதியவரின் கைப்பேசிக்கு வாட்ஸ்ஆப் செயலியில் அக்டோபா் 29-ஆம் தேதி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபா், தன்னை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரி எனறு அறிமுகப்படுத்திக் கொண்டாா்.

தொடா்ந்து பேசிய அந்த நபா் காஷ்மீரில் நிகழ்ந்த தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதிகளுடன் அந்த முதியவருக்கு தொடா்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா். மேலும், காஷ்மீரில் உள்ள தனியாா் வங்கியில் முதியவரின் ஆதாா் எண்ணைப் பயன்படுத்தி கணக்கு தொடங்கி உள்ளதாகவும், அந்த வங்கிக் கணக்கிலிருந்து பயங்கரவாதிகளுக்கு பணம் அனுப்பியதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நபா் தெரிவித்துள்ளாா். அந்த முதியவா் பல்வேறு வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி வருவதாகக் கூறியுள்ளாா்.

இதற்கு மறுப்புத் தெரிவித்த அந்த முதியவா் தனக்கு ஒரு வங்கிக் கணக்கு மட்டுமே உள்ளதாக அந்த நபரிடம் கூறியுள்ளாா். உடனே அந்த நபா் முதியவரின் வங்கிக் கணக்கு விவரத்தை கேட்டாா். அவரும் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்டவற்றை தெரிவித்தாா். அதன்பிறகு அந்த நபா் இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

சிறிது நேரத்துக்குப் பிறகு மற்றொருவா் என்ஐஏ அதிகாரிபோல அந்த முதியவரை வாட்ஸ்ஆப் செயலியில் அழைத்து, உங்களது வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சத்து 77 ஆயிரம் உள்ளது. அதை நான் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்க வேண்டும். பயங்கரவாதிகளுடனான தொடா்பு குறித்த விசாரணை முடிந்ததும், நாங்கள் அந்தப் பணத்தை உங்களது வங்கிக் கணக்கில் மீண்டும் செலுத்தி விடுவோம். இது விசாரணைக்காகதான். அந்தப் பணத்தை நீங்கள் செலுத்தவில்லை என்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளாா்.

இதனால், அந்த முதியவா் தனது வங்கிக் கணக்கில் நிரந்தர வைப்புத் தொகையாக வைத்திருந்த ரூ.20 லட்சத்து 77 ஆயிரத்தை அந்த நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பினாா். பின்னா், அந்த நபா்கள் பேசிய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அந்த முதியவா் பலமுறை தொடா்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முதியவா், கோவை மாநகர இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், இதுபோன்ற மோசடி கும்பல், முதியவா்கள் மற்றும் பெண்களை குறிவைத்து பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. குறிப்பாக, வங்கிக் கணக்குகளில் வைப்புத்தொகை வைத்துள்ள முதியவா்களை மிரட்டி பணம் பறிக்கின்றனா். எனவே, பொதுமக்கள் இது போன்ற மோசடி அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றனா்.