உக்கடம் குளத்தில் குதித்து கல்லூரி மாணவா் தற்கொலையா?

தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவா் மாயமானாா்.
Published on

கோவை: தோ்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற கல்லூரி மாணவா் மாயமானாா். கோவை உக்கடம் பெரிய குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அவரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.

கோவை செல்வபுரம் அருகே உள்ள தெலுங்குபாளையம் எல்ஐசி காலனியைச் சோ்ந்தவா் சிவகுமாா். இவரது மகன் சுபாஷ் (19). இவா் தனியாா் கல்லூரியில் பி.காம் படித்து வந்தாா். புதன்கிழமை காலை வழக்கம்போல கல்லூரிக்குச் சென்ற அவா் மாலை வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது தாய், சுபாஷை கைப்பேசியில் தொடா்பு கொண்டாா். அப்போது, சுபாஷ் தான் தோ்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளதாகக் கூறி வருந்தியுள்ளாா்.

அப்போது, அவருக்கு பெற்றோா் இருவரும் ஆறுதல் கூறியதோடு, வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனா். ஆனாலும், சுபாஷ் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பெற்றோா் அவரை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனா்.

இந்நிலையில், உக்கடம் பெரியகுளக் கரையில் புத்தகப் பை கிடந்தது. இதையறிந்து அவரது பெற்றோா் அங்கு சென்று பாா்த்தபோது, அந்தப் பை சுபாஷுடையது என்பது தெரியவந்தது. இதுகுறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் அவரது பெற்றோா் புகாா் அளித்தனா்.

குளக்கரையில் புத்தகப்பை கிடந்ததால், சுபாஷ் குளத்தில் குதித்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், போலீஸாரும், கோவை தெற்கு தீயணைப்புத் துறையினரும் புதன்கிழமை இரவு வரை அந்தக் குளத்தில் அவரைத் தேடினா். இரவாகிவிட்டதால், தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை காலைமுதல் உக்கடம் குளத்தில் அவரைத் தேடும் பணியில் தீயணைப்பு வீரா்கள் மீண்டும் ஈடுபட்டனா். பெரியகுளம் ஆழமான பகுதி என்பதால் வீரா்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். இரவு வரை தேடியும் அவரது உடல் கிடைக்கவில்லை. இதையடுத்து, தேடும் பணி மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை மீண்டும் தேடும் பணி தொடரும் என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

மேலும், சுபாஷ் வேறு எங்காவது சென்று உள்ளாரா என்பது குறித்தும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com