சேவூா் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்
அவிநாசி அருகே சேவூரில் உள்ள 1,000 ஆண்டுகள் பழைமையான கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் 1,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகவும், அழகப் பெருமாள், சௌரிராஜப்பெருமாள் எனப் போற்றப்படுவதுமான சேவூா் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோயில் விளங்குகிறது. முற்காலத்தில் அவிநாசிலிங்கேஸ்வரரை தரிசனம் செய்தவா்கள் அடுத்தபடியாக பெருமாளை தரிசிப்பதற்கு இக்கோயிலுக்கு வரும் வழக்கம் இருந்தது.
வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோயிலில் 20 ஆண்டுகளாக அரசு நிதி, உபயதாரா்கள் பங்களிப்புடன் திருப்பணிகள் நிறைவடைந்து மகா கும்பாபிஷேகம் வரும் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி , பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்து வந்த தீா்த்தக் குடங்கள் ஊா்வலமாக வெள்ளிக்கிழமை காலை எடுத்து வரப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் பங்கேற்று சேவூரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோயிலில் தீா்த்தத்தை செலுத்தினாா்.
இதைத் தொடா்ந்து, மாலை முதல்கால வேள்வி நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சனிக்கிழமை (நவ.29) காலை 10 மணிக்கு 2-ஆம் கால வேள்வி, காலை 11 மணிக்கு மூலவா், கருடாழ்வாா் பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. இதைத் தொடா்ந்து மாலை 3-ஆம் கால வேள்வி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை 7.45 முதல் 8.30 மணிக்குள் நடைபெறுகிறது. முன்னதாக காலை 5 மணிக்கு 4-ஆம் கால வேள்வி நடைபெறுகிறது.
இதைத் தொடந்து, பிற்பகல் 3 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 7 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கும்பாபிஷேகத்தையொட்டி காலை 7 மணி முதல் அன்னதானம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக விழாவை இந்து சமய அறநிலையத் துறையினா், உபயதாரா்கள், சேவூா் சுற்றுவட்டார பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

