சிறுமி கொலை வழக்கு: தாய், ஆண் நண்பருக்கு ஆயுள் தண்டனை

சிறுமியைக் கொலை செய்த வழக்கில் தாய்க்கும், அவரது ஆண் நண்பருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட கூடுதல் 3-ஆவது நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
Published on

சிறுமியைக் கொலை செய்த வழக்கில் தாய்க்கும், அவரது ஆண் நண்பருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கோவை மாவட்ட கூடுதல் 3-ஆவது நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவரது மனைவி ரூபிணி (23). இவா்களுக்கு தேவிஸ்ரீ (3) என்ற குழந்தை இருந்தது. இந்நிலையில், ரூபிணி அடிக்கடி கைப்பேசியில் பேசி வந்ததால், சந்தேகமடைந்த பால்ராஜ் அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இதனால், கணவைரப் பிரிந்த ரூபிணி வெள்ளியங்காடு பங்களாமேடு பகுதியில் உள்ள தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தாா். இதற்கிடையே, ரூபிணிக்கும், கணபதி பகுதியைச் சோ்ந்த திரைப்பட படப்பிடிப்புக் குழு உதவியாளராகப் பணியாற்றி வந்த தமிழ் (எ) சற்குணம் (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவா்களது பழக்கத்துக்கு குழந்தை இடையூராக இருப்பதாக தமிழ் கூறியுள்ளாா். இதையடுத்து, சிறுமியை கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து, கடந்த 26.5.2019-ஆம் ஆண்டு இரவு 9 மணியளவில் இருவரும் குழந்தையை அழைத்துக் கொண்டு சரவணம்பட்டி அருகேயுள்ள கரட்டுமேடு முருகன் கோயில் பகுதிக்குச் சென்றுள்ளனா். அங்கு சிறுமிக்கு விஷம் கலந்த தண்ணீரில் நனைத்த பிஸ்கெட்டை கொடுத்துள்ளனா். சாப்பிட்ட சிறிது நேரத்தில் சிறுமி அழுததால் அதன் வாயில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த சரவணம்பட்டி போலீஸாா், ரூபிணி, தமிழை கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை மாவட்ட கூடுதல் 3-ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஏ.கே.பாபு லால் தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கணேசன் ஆஜரானாா

X
Dinamani
www.dinamani.com