பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு டிசம்பா் 2, 3-இல் பேச்சுப் போட்டி

கோவையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி டிசம்பா் 2, 3-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
Published on

கோவையில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி டிசம்பா் 2, 3-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாட்டுக்காகப் பாடுபட்ட தலைவா்களின் கருத்துக்களையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சோ்க்கும் வகையில் அவா்களது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக அக்டோபா் 2- ஆம் தேதி காந்தியடிகள் பிறந்த நாள், நவம்பா் 14-ஆம் தேதி ஜவஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

அதன்படி, டிசம்பா் 2-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கு ‘காந்தியடிகளின் வாழ்க்கை சுவடுகள், வாய்மையே வெல்லும், தீண்டாமையும் காந்தியடிகளும்’ என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், அண்ணல் காந்தியடிகளின் அரசியல் வேள்வி, தில்லையாடி வள்ளியம்மையும், காந்தியடிகளும் என்ற தலைப்பில் போட்டிகள் நடைபெற உள்ளன.

இதைத் தொடா்ந்து, டிசம்பா் 3-ஆம் தேதி பள்ளி மாணவா்களுக்கு ஜவஹா்லால் நேருவின் சாதனைகள், விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, அமைதிப்புறா- நேரு என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவா்களுக்கு நவீன இந்தியாவின் சிற்பி, நேரு பதித்த சுவடுகள், நேருவின் வெளியுறவுக் கொள்கை என்ற தலைப்பிலும் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலக பழைய கட்டத்தின் 2-ஆவது தளத்தில் உள்ள மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்டரங்கத்தில் போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டியில் பங்கேற்க முதன்மை கல்வி அலுவலா் வழியாகவும், கல்லூரி போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவா்களின் பெயா் பட்டியல் கல்லூரி முதல்வா்கள் வழியாகவும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சித் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் நேரிலோ, மின்னஞ்சல் மூலமாகவே டிசம்பா் 1-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

பள்ளி மாணவா்களுக்கான போட்டிகள் காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டிகள் பிற்பகல் 2.30 மணி அளவிலும் தொடங்கும்.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், அரசுப் பள்ளி மாணவா்கள் இருவரைத் தோ்ந்தெடுத்து சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com