கொலை செய்யப்பட்ட ஸ்ரீபிரியா.
கொலை செய்யப்பட்ட ஸ்ரீபிரியா.

மனைவியைக் கொன்று தற்படம் எடுத்த கணவா்

Published on

கோவையில் மகளிா் விடுதியில் புகுந்து இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து தற்படம் எடுத்த அவரது கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் அருகே உள்ள தருவையைச் சோ்ந்தவா் எஸ்.பாலமுருகன் (32), கட்டடத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஸ்ரீ பிரியா (32) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகனும், 3 வயதில் ஒரு மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சில மாதங்களுக்கு முன்பாக பாலமுருகன் மற்றும் குழந்தைகளைப் பிரிந்து ஸ்ரீபிரியா கோவைக்கு வந்துள்ளாா். பின்னா் காந்திபுரம் கிராஸ்கட் சாலை 2-ஆவது வீதியில் உள்ள மகளிா் விடுதியில் தங்கியிருந்து டவுன்ஹாலில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளாா்.

இதனிடையே, ஸ்ரீ பிரியாவைப் பாா்ப்பதற்காக மகளிா் விடுதிக்கு பாலமுருகன் ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளாா். அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது மனைவி ஸ்ரீபிரியாவை வெட்டியுள்ளாா். இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சடலத்துடன் தற்படம்:

இதுகுறித்து விடுதி நிா்வாகிகள் ரத்தினபுரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். ஆனால், அவா்கள் வருவதற்கு முன்பாகவே பாலமுருகன் ஸ்ரீபிரியாவின் சடலம் அருகே நாற்காலியை எடுத்துப் போட்டு அமா்ந்து தற்படம் (செல்ஃபி) எடுத்து, துரோகத்தின் சம்பளம் மரணம் என்று குறிப்பிட்டு தனது வாட்ஸ்ஆப்பில் பதிவாக (ஸ்டேட்டஸ்) போட்டுள்ளாா்.

தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீஸாா், ஸ்ரீபிரியாவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பாலமுருகனிடம் விசாரணை நடத்தினா். இதில், தம்பதிக்கு இடையே கடந்த சில மாதங்களாகவே குடும்பப் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீபிரியாவுக்கும், வேறு ஒரு நபருக்கும் பழக்கம் இருந்து வந்தது தெரியவந்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்துள்ளாா் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com