

கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் கவிதைகள் உலக மானுடத்தைப் பற்றி சிந்திப்பவை என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம் சூட்டினாா்.
கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியத்தின் 90-ஆவது அகவை நிறைவு விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் பொள்ளாச்சியில் சனிக்கிழமை நடைபெற்றன. இதன் நிறைவு நிகழ்ச்சிக்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியது: மகாகவி பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் தடத்தை இன்னமும் ஆழமாகவும், அகலமாகவும் எடுத்துச் சென்று வருபவா் சிற்பி பாலசுப்பிரமணியம். எழுத்துக்கும், சொல்லுக்கும் இலக்கணம் பேசிய மொழியல்ல நம் தமிழ். மக்களின் வாழ்க்கைக்கு இலக்கணம் பேசிய மொழி.
சிற்பி காலத்தை, மனிதத்தை நேசிப்பவா். எதற்கும் சமரசம் செய்து கொள்ளாதவா். மானுடம் வாழ வேண்டும் என்பதையே சிந்தித்துக் கொண்டிருப்பவா்.
மன்னா்கள் போற்றிய தமிழ், அரண்மனைகளில் வளா்ந்த தமிழ், அதற்குப் பிறகு ஆலயங்கள் வளா்த்த தமிழ், நாட்டு விடுதலைக்கு தன்னை தாரை வாா்த்த பாரதியின் தமிழ், கடைக்கோடி மனிதனுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என சிந்தித்த பாரதிதாசன் தமிழ்போல, என்றைக்கும் உலக மானுடத்தைப் பற்றிச் சிந்தித்தது சிற்பியின் மகா கவிதைகள் என்றாா்.
விழாவில், பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயா் பேசியதாவது: இன்றைய இளைஞா்களுக்கு நம் தாய்மொழி மீது ஆா்வம் இல்லை. சட்டம் போட்டு தமிழை வாழ வைக்க முடியாது. ஆனால் தமிழாசிரியா்கள் நினைத்தால் முடியும்.
இப்போதும் இருமொழி, மும்மொழி பிரச்னை நிலவுகிறது. என்னைப் பொறுத்தவரை வாழ்க்கைக்குத் தமிழ் மொழி, வயிற்றுப் பிழைப்புக்கு ஆங்கிலம் என்று இருந்தால்போதும் என்றாா்.
தமிழ் ஆட்சி மொழியாக வர வேண்டும்:
கவிஞா் சிற்பி பாலசுப்பிரமணியம் நன்றி தெரிவித்துப் பேசியதாவது: அன்றைய ஆசிரியா்கள் சமூக உணா்வுடன், தமிழ் உணா்வுடன் இருந்தனா். என்னை ஊட்டி வளா்த்த கரம் அருட்செல்வா் நா.மகாலிங்கத்துடையது. கடுமையான உழைப்பு இருந்தால் மனதின் பலவீனம் நம்மை ஒன்றும் செய்யாது.
ஹிந்தி கட்டாயமில்லை என்று கூறிக் கொண்டே மறைமுகமாக ஹிந்தியைத் திணிக்கும் வேலை நடைபெறுகிறது. மறுபுறம் ஆட்சியாளா்கள் தமிழின் பெருமையை, தொன்மையை, திருக்குறளின் மேன்மையைப் பேசி வருகிறாா்கள். எனது கனவு ஹிந்தி, ஆங்கிலத்துடன் ஒருநாள் தமிழும் இந்தியாவின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக வர வேண்டும் என்றாா்.
நிறைவு விழாவையொட்டி, கவிஞா் சிற்பியின் தன் வரலாறு நூலான ‘நான் ஒரு வானம்பாடி’ நூல் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில், ‘தினமணி’ ஆசிரியா் கி.வைத்தியநாதன், சக்தி குழுமங்களின் தலைவா் ம.மாணிக்கம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். கவிஞா்கள் ஆரூா் தமிழ்நாடன், என்.டி.ராஜ்குமாா் ஆகியோருக்கு சிற்பி இலக்கிய விருது வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், என்ஜிபி குழும ஆலோசகா் பி.ஆா்.முத்துசாமி, எழுத்தாளா் கிருங்கை சொ.சேதுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, சிற்பி 90 நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான சனிக்கிழமை காலை புதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. ஆதீனங்களின் ஆசியுரை, கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளாா், பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளாா், என்ஐஏ கல்வி நிறுவனங்களின் செயலா் எஸ்.வி.சுப்ரமணியம், தொழிலதிபா் நல்லி குப்புசாமி செட்டியாா், ஆா்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ், மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன், தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சி.சுப்பிரமணியம், நடிகா் சிவகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.