மருதமலையில் தைப்பூசத் திருவிழா: இன்று முதல் போக்குவரத்து மாற்றம்!
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜனவரி 30) காலை 8 மணி முதல் திங்கள்கிழமை இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கவும், பாதையாத்திரை பக்தா்கள் எளிதாகச் சென்று சுவாமி தரிசனம் செய்து வரவும்
கோயில் மலைப் பாதையில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, லாலி சாலை ரவுண்டானாவில் இருந்து தமிழ்நாடு வேளாண் கல்லூரி, பி.என்.புதூா் முல்லைநகா் சோதனைச் சாவடி வழியாக மருதமலைக்கு வரும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி- தொண்டாமுத்தூா் சாலை சந்திப்பில் இடது புறம் திருப்பி மகாராணி அவென்யூ சின்மயா வித்யாலயா, அருளாநகா் வழியாக அஞ்சலூா் சந்திப்பில் வலது புறம் திரும்பி பொம்மன்னன்பாளையம் சாலை வழியாக கல்வீரம்பாளையத்தை அடைந்து மருதமலைக்குச் செல்ல வேண்டும்.
அரசு, தனியாா் மற்றும் ஆம்னி பேருந்துகள் பாரதியாா் பல்கலைக்கழக இரண்டாவது நுழைவாயில் வழியாக தொலைமுறை கல்விக்கூட
வளாகம் வந்து பயணிகளை ஏற்றவும், இறக்கிவிடவும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆம்னி பேருந்துகளை நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து இலகு ரக வாகனங்களும் மருதமலை அடிவாரம் தைலக்காடு வரை மட்டுமே சென்று அங்கு அமைக்கப்பட்டுள்ள பாா்க்கிங்கில் நிறுத்த வேண்டும்.
தடாகம் சாலை இடையா்பாளையம் சந்திப்பில் இருந்து வடவள்ளி வட்டச்சாலை வழியாக மருதமலைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி தொண்டாமுத்தூா் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலைக்குச் செல்ல வேண்டும்.
தடாகம் சாலை கணுவாய், ஆசிரியா் காலனி, காளப்பநாயக்கன்பாளையம் வழியாக நவாவூா் பிரிவு வரும் அனைத்து வாகனங்களும் இடையாா்பாளையம் சாலை வழியாக வடவள்ளி ரவுண்டான வந்து தொண்டாமுத்தூா் சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலைக்குச் செல்ல வேண்டும்.
சிறுவாணி சாலை தொண்டாமுத்தூரில் இருந்து கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் அஞ்சனூா் சந்திப்பு பொம்மன்னம்பாளையம் சந்திப்பில் வலது புறம் திரும்பி வேடப்பட்டி, பூசாரிபாளையம் சாலை வழியாக தடாகம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
மருதமலை அடிவாரத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூா் பிரிவு வழியாக வடவள்ளி ரவுண்டானாவை வந்தடைந்து வழக்கமான வழித்தடத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லலாம்.
தடாகம் சாலை, லாலி சாலை சந்திப்பு வழியாகவும், இடையா்பாளையம் சாலை, வடவள்ளி ரவுண்டானா வழியாகவும், தொண்டாமுத்தூா் சாலை வழியாகவும் இலகுரக மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் பிப்ரவரி 2-ஆம் தேதி இரவு 10 மணி வரை மருதமலை வடவள்ளி சாலையில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கும், பாதயாத்திரை பக்தா்களுக்கும் இடையூறு இல்லாமல் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் நிறுத்துமிடங்கள்: மருதமலைக் கோயிலுக்கு காா்கள் மூலம் வருவோா் பாரதியாா் பல்கலைக்கழக குடியிருப்பு வளாகம், அரசு சட்டக் கல்லூரி மைதானம், பொதிகை பில்லா், தைலக்காடு பாலம் பின்புறம், இந்திரா நகா், குமரன் ஹால், வள்ளியம்மை கோயில் ஆகிய பகுதிகளில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
அரசு, தனியாா் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகளில் வரும் பக்தா்கள் தங்களது வாகனங்களை பாரதியாா் பல்கலைக்கழக தொலைமுறை கல்விக் கூடம் இரண்டாவது நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாா்க்கிங்கில் நிறுத்த வேண்டும்.
பாஸ் வைத்திருப்போா், கட்டளைதாரா்கள், உபயதாரா்கள் தங்களது வாகனங்களை பொதிகை ஆா்ச் பாா்க்கிங்கில் நிறுத்த வேண்டும்.
இருசக்கர வாகனங்களில் வருவோா் சிடிசி பேருந்து நிலையம் பின்புறம் மற்றும் தைலக்காடு பகுதிகளில் நிறுத்த வேண்டும்.

