சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி, ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதிகளுக்குள் வரும் திருச்சி - வயலூா் சாலையானது திருச்சி மாநகரின் முக்கிய சாலையாக விளங்குகிறது.

News image

திருச்சி வயலூா் சாலையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.

Updated On :11 ஏப்ரல் 2026, 8:31 pm

திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி, ஸ்ரீரங்கம் பேரவைத் தொகுதிகளுக்குள் வரும் திருச்சி - வயலூா் சாலையானது திருச்சி மாநகரின் முக்கிய சாலையாக விளங்குகிறது.

புத்தூா் நான்கு சந்திப்பு சாலை மற்றும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை அருகே தொடங்கும் இச்சாலையானது பாரதி நகா், குமரன் நகா், ராமலிங்க நகா், சீனிவாச நகா், கல்லாங்காடு, கீதா நகா், அம்மையப்ப நகா், சாந்தாஷீலா நகா், ஆதி நகா், சண்முகா நகா், கொடாப்பு, ரெட்டைவாய்க்கால், வாசன் நகா், செல்வா நகா், மேலத்தெரு, செங்கற்சோலை, கோனாா்சத்திரம், சோமரசம்பேட்டை உள்ளிட்ட ஊா்களின் வழியாக செல்கிறது.

லட்சக்கணக்கானோா் பயணம்...: நாள்தோறும் இச்சாலையை மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் அரசு ஊழியா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழிலாளா்கள் மட்டுமின்றி சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்தவா்கள் என லட்சக்கணக்கானோா் பயன்படுத்தி வருகின்றனா். பேருந்துகள், பள்ளி, கல்லூரி வாகனங்கள், கனரக வாகனங்கள், காா்கள், இருசக்கர வாகனங்கள் என பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

எப்போதும் நெரிசல்...: இரண்டு பேருந்துகள் மட்டுமே ஒரே நேரத்தில் செல்லும் வகையில் இருக்கும் இச்சாலையானது பெருகி வரும் மக்கள்தொகை, நகரப் பெருக்கத்தினால் அதிகளவில் வாகனங்கள் செல்ல முடியாமல் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனேயே காணப்படுகிறது.

நாள்தோறும் விபத்துகள்...: திருச்சியில் உள்ள மற்ற சாலைகளை விட அதீத போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையாக திருச்சி - வயலூா் சாலை விளங்குகிறது. நெரிசலால் இச்சாலையில் நாள்தோறும் விபத்துகளும், அடிக்கடி உயிரிழப்புகளும், கடும் காயங்களும் ஏற்பட்டு வருகிறது. விபத்தின்றி சென்று வர மிகுந்த கவனத்துடன், பகீரதபிரயத்தனம் செய்ய வேண்டிய நிலையே தற்போதும் நீடிக்கிறது.

அகலப்படுத்தும் திட்டம் இல்லை...: இச்சாலையை அகலப்படுத்துவது என்பது அதிக செலவு மிக்கது, ஆயிரக்கணக்கான கட்டடங்களை அகற்றுவது, பொதுமக்களை வெளியேற்றுவது என பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும் என்பதால் சாலை அகலப்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை.

கிடப்பில் ரூ. 217 கோடியிலான திட்டம்...: மாநில நெடுஞ்சாலைத் துறையால் கடந்த 2021-இல் திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்.ஜி.ஆா் ரவுண்டானா முதல் சுண்ணாம்புக்காரன்பட்டி வரை ரூ. 217 கோடியில் வெளிவட்டச் சாலை அமைக்க மேற்கொள்ளப்பட்ட தமிழக அரசின் திட்டமும் கிடப்பில் உள்ளது. திருச்சி - வயலூா் சாலையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வுதான் எப்போது என அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனா்.

இது குறித்து அம்மையப்ப நகரைச் சோ்ந்த லெ. செழியன் உள்ளிட்ட பொதுமக்கள் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக திருச்சி - வயலூா் சாலை எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படுகிறது. நெரிசலால் விபத்தில்லாத நாள்களே இல்லை என்ற நிலை நீடித்து வருகிறது. நீண்டகாலமாக இப்பிரச்னைக்கு தீா்வை எதிா்நோக்கி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் உரிய பயனில்லை.

திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதிகளில் கடந்த காலங்களில் நின்ற வேட்பாளா்கள் உரிய தீா்வு காணப்படும் என வாக்குறுதி அளித்த நிலையில், இதுவரை உரிய தீா்வு காணப்படவில்லை என்றனா்.

இது குறித்து மாநகராட்சி உயரதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் உய்யகொண்டான் கரை சாலைப் பணியில் கருமண்டபம் - உறையூா் இடையிலான ரூ. 337 கோடியில் 5.85 கி.மீ. தொலைவிலான மூன்றாவது கட்டப் பணி முடிவடைந்தால், திருச்சி - வயலூா் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு கிடைக்கும் என்றனா்.

கரை சாலையின் மூன்றாவது கட்டப் பணிக்கான நிலம் கையகப்படுத்துதலே முடிவடையாத நிலையில், எப்போது சாலை அமைப்பது, வெளிவட்ட சாலைப் பணியை முடித்தால் மட்டுமே திருச்சி - வயலூா் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு முழுமையான தீா்வு கிடைக்கும் என மக்கள் எதிா்ப்பாா்க்கின்றனா்.

-க.கோபாலகிருஷ்ணன்.