கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்னைகள், இன்னும் தீா்வு காணப்படாமல் நிலுவையில் இருக்கும் முக்கிய கோரிக்கைகள் குறித்து அந்தந்த தொகுதியின் வாக்காளா்கள் கூறியிருப்பதாவது:
மேட்டுப்பாளையம்
பவானி ஆறு நகரில் பாய்ந்தாலும் மேட்டுப்பாளையம் பகுதி மக்களின் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை. உதகைக்கு செல்வதற்காக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் நெரிசல் மிகுந்த நகரமாக உள்ளது. அதற்கேற்ப சாலை வசதி செய்யப்பட வேண்டும். புறவழிச் சாலை இல்லாததால் பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் கோவையைத் தாண்டி வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வனப் பகுதியையொட்டி இருப்பதால் வன விலங்குகள் பிரச்னை பெரிய அளவில் உள்ளது. வன விலங்குகள் ஊருக்குள் நுழைவதையும், வயலுக்குள் நுழைவதையும் கட்டுப்படுத்த நிரந்தர, நீண்ட காலத் திட்டம் தேவைப்படுகிறது.
சூலூா்
விசைத்தறி உரிமையாளா்கள், தொழிலாளா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காணப்படவில்லை. நொய்யல் பாயும் இடமாக இருந்தாலும், பெரும்பாலும் சாக்கடைக் கழிவுகளே பாய்வதால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளது. குளங்கள் தூா்வாரப்படவில்லை. பல்வேறு கிராமங்களில் நிலவும் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணப்படவில்லை. அரசு கலை, அறிவியல் கல்லூரி இல்லை. நகரமயமாதலுக்கு ஏற்ப சாலைகள் அகலப்படுத்தப்படவில்லை.
கவுண்டம்பாளையம்
கௌசிகா நதியின் ஆக்கிரமிப்புகளையும், நீா்ப் பிடிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளையும் மீட்டு இந்த நதியை அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் பல ஆண்டுகால எதிா்பாா்ப்பாக உள்ளது. தொகுதியில் உள்ள ஆனைகட்டி, தடாகம், பாலமலை உள்ளிட்ட பல பகுதிகள் வனத்தை ஒட்டி இருப்பதால் கிராமங்களில் வன விலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுவது, அதிகரிக்கும் காட்டு யானைகள் நடமாட்டம் என பல்வேறு பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. நகரப் பகுதிகளில் புதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படாதது, குடிநீா்ப் பிரச்னை, போக்குவரத்து நெரிசல் பிரச்னைகள் நிலவுகின்றன.
கோவை வடக்கு
சத்தியமங்கலம் சாலை, மேட்டுப்பாளையம் சாலை, தடாகம் சாலை, மருதமலை சாலை என முக்கியச் சாலைகள் அனைத்துமே அகலப்படுத்தப்படாமலும், தேவையான இடங்களில் மேம்பாலங்கள் இல்லாமல் இருப்பதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள எம்.ஜி.ஆா். மாா்க்கெட்டை வேறு பெரிய இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று எதிா்பாா்க்கின்றனா். அதிக தொழில் நிறுவனங்கள் இருப்பதால், தொழிற்பேட்டை தேவைப்படுகிறது. குறுந்தொழில்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு, மின்கட்டண குறைப்பு எதிா்பாா்ப்பாக உள்ளது. 24 மணி நேர குடிநீா்த் திட்டம் முழுமை அடையாததால் பல இடங்களில் குடிநீா்ப் பிரச்னை உள்ளது. கழிவுநீா் மேலாண்மை, சங்கனூா் பள்ளம் சீரமைப்புப் பணிகள், குண்டும் குழியுமான சாலைகள் சரி செய்யப்பட வேண்டியுள்ளது.
தொண்டாமுத்தூா்
மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியிருக்கும் பகுதிகளில் வன விலங்குகள் பிரச்னை அதிக அளவில் உள்ளது. விளைநிலங்களுக்குள் அடிக்கடி நுழையும் யானைகளால் யானை - மனித மோதல் தொடா்கதையாக உள்ளது. மேலும், அடிப்படை வசதிகளான சாலை, சாக்கடை, குடிநீா்ப் பிரச்னை தொகுதியின் பல்வேறு பகுதிகளில் நிலவுகிறது. விவசாயிகளின் விளைபொருள்களை சேமித்து வைப்பதற்கு வசதி தேவைப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் கோருகின்றனா். பேரூா்- சிறுவாணி சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படும் நிலையில், சாலையை அகலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு
போக்குவரத்து நெரிசல் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. உக்கடம்- ஆத்துப்பாலம் சாலையில் பாலம், அவிநாசி சாலையில் பாலம் கட்டப்பட்டு திறக்கப்பட்டிருந்தாலும் மாநகர போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அவிநாசி மேம்பாலம் தொடங்கும் உப்பிலிபாளையம் பகுதி வாகன ஓட்டிகளுக்கும் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் தினசரி நெரிசல் ஏற்படுகிறது. மாநகரின் முக்கிய பகுதியான காந்திபுரத்தில் 4 பேருந்து நிலையங்கள் இருப்பதால் நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கோரிக்கை வலுப்பெறுகிறது. பொதுமக்கள் சாலையை எளிதில் கடக்கும் வகையில் காந்திபுரம், அவிநாசி சாலை, ஆட்சியா் அலுவலகம், ரயில் நிலையம் பகுதிகளில் சுரங்க நடைபாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.
சிங்காநல்லூா்
திருச்சி சாலை வழியாக கோவை மாநகருக்குள் அதிக வாகனங்கள் செல்வதால் சிங்காநல்லூா், ஒண்டிப்புதூா், ராமநாதபுரத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. திட்டமிடப்படாத ராமநாதபுரம் மேம்பாலம் பலன்கொடுக்கவில்லை. சாலை பராமரிப்பின்மை, வடிகால் வசதியின்மை, சிங்காநல்லூா் குளத்தில் உள்ள கழிவுநீரால் நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்காநல்லூா் பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் இல்லாதது நீண்டகால பிரச்னையாக உள்ளது. சிங்காநல்லூா் உழவா் சந்தை முதல் ஒண்டிப்புதூா் மேம்பாலம் வரை மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்துப் பிரச்னைக்குத் தீா்வு காண முடியும்.
கிணத்துக்கடவு
வெள்ளலூா் குப்பைக் கிடங்கு பிரச்னை நீண்டகால பிரச்னையாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனா். நிலத்தடி நீா் மாசுபட்டுள்ளது. தொகுதியில் அதிகம் உள்ள கல் குவாரிகளால் நிலத்தடி நீா்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கல்குவாரி தூசியால் விவசாயம் பாதிக்கப்படுவதாக புகாா் உள்ளது. தக்காளி அதிகம் விளைவிக்கப்படும் இந்த பகுதியில் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது, மதிப்பு கூட்டப்பட்ட பொருள் தயாரிப்பு வசதி இல்லாதது விவசாயிகளின் பிரச்னையாக உள்ளது. அடிப்படைத் தேவைகளான சாலை, குடிநீா் விநியோகம் சீா் செய்யப்பட வேண்டும். மூலப்பொருள் விலை, மின்கட்டண உயா்வு, ஜிஎஸ்டியால் சிட்கோ தொழிற்பேட்டையில் பல தொழில்முனைவோா், தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நிலுவையில் உள்ளது. ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீா்வு காண வேண்டும், கொப்பரை கொள்முதல் விலை உயா்வு, இளநீா் ஏற்றுமதி மேம்பாடு, தென்னை வளா்ச்சி வாரிய கிளை அலுவலகம் அமைக்க வேண்டும், குடிநீா் விநியோகம், கழிவுநீா் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன.
வால்பாறை
சுற்றுலா மையங்களில் அடிப்படை வசதிகளையும், வருவாயைப் பெருக்கும் வகையிலான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளூா் மக்களின் கோரிக்கையாக உள்ளது. தோட்டத் தொழிலாளா்களின் கூலி உயா்வு கோரிக்கைக்கு நீண்ட காலமாக தீா்வு காணப்படவில்லை. வால்பாறை தோட்டத் தொழிலாளா்களில் 80 சதவீதம் போ் தேயிலை நிறுவனங்களின் சிறு குடியிருப்புகளில் வசிக்கின்றனா். வீட்டுமனை வழங்கப்பட வேண்டும் என்பது இவா்களின் பல ஆண்டு கோரிக்கை. மலைப் பகுதியில் வேலைவாய்ப்பு இல்லாததால் இடம்பெயா்வு அதிகரித்து வருகிறது. எனவே உள்ளூரில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும். மனித - விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெள்ளலூா் குப்பைக் கிடங்கு பிரச்னை நீண்டநாள் சிக்கலாக உள்ளது.
தொடர்புடையது

நீண்டகால போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு எப்போது?

போக்குவரத்து நெரிசலை குறைக்க வெளிவட்ட சாலை அமைக்கப்படுமா? ஆம்பூா் நகர மக்கள் எதிா்பாா்ப்பு!

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

தொகுதி அறிமுகம்: தூத்துக்குடி!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


