நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மிரட்டும் தனியார் வங்கிகள்; கைவிரிக்கும் தேசிய வங்கிகள்!

கோவை, ஜூன் 25: தொழில் நெருக்கடி ஒருபுறம், பண நெருக்கடி மறுபுறம் என அழிவின் விழிம்பில் இருக்கும் குறுந்தொழில்கூடங்களை தனியார் வங்கிகள் குண்டர் படை அனுப்பி மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:03 pm

ஜெபலின்ஜான்

கோவை, ஜூன் 25: தொழில் நெருக்கடி ஒருபுறம், பண நெருக்கடி மறுபுறம் என அழிவின் விழிம்பில் இருக்கும் குறுந்தொழில்கூடங்களை தனியார் வங்கிகள் குண்டர் படை அனுப்பி மிரட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

 ஆனால், தேசிய வங்கிகளோ ரிசர்வ் வங்கியின் உத்தரவையும் மதிக்காமல் கணக்கு துவங்கக்கூட குறுந்தொழில்கூடங்களை அனுமதிப்பதில்லை.

 சென்னை, திருச்சி, சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய வெளிமாநிலங்களில் உள்ள பெரிய தொழில்நிறுவனங்களுக்கு உதிரிப்பாகங்களை ஒப்பந்த அடிப்படையில் செய்துதரும் குறுந்தொழில்கூடங்கள் கோவையில் இயங்கி வருகின்றன.

 கிடப்பில் ரிசர்வ் வங்கி உத்தரவு தமிழகத்திலேயே அதிகபட்சமாக சுமார் 25 ஆயிரம் குறுந்தொழில்கூடங்கள் இங்கு உள்ளன. இவற்றில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட படித்த, படிக்காத தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

 ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை முதலீட்டில் துவக்கப்பட்டுள்ள இந்த குறுந்தொழில்கூடங்கள் தங்களது தொழில்களை விரிவுப்படுத்த தனியார் நிதிநிறுவனங்கள் அல்லது தனியார் வங்கிகளைத்தான் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

 கணக்கு துவக்கவோ அல்லது கடன் வழங்கவோ குறுந்தொழில்கூடங்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் முன்வருவதில்லை.

 குறுந்தொழில்கூடங்களின் தொடர் வேண்டுகோள்களையடுத்து குறைந்தபட்சம் 1,000 ரூபாய் இருப்பு வைக்கும் குறுந்தொழில்கூடங்களுக்கு நடப்பு கணக்கு துவக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி 22.2.2007-ல் உத்தரவிட்டது.

 ஆனால், இதுவரை 100-க்கும் குறைவான குறுந்தொழில்கூடங்களுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 விழிபிதுங்கும் தொழில்முனைவோர் "பெரும்பாலான குறுந்தொழில்கூடங்களுக்கு நடப்பு கணக்கு துவக்க தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மறுத்துவிடுகின்றன.

 இதை சாதகமாக பயன்படுத்தும் தனியார் வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் குறுந்தொழில்கூடங்களை தங்களது வலையில் சிக்கவைத்துவிடுகின்றன. சிக்கல் இல்லாமல் தொழில் நடைபெறும்போது அதிக வட்டியை கட்டிவிடும் குறுந்தொழில்நிறுவனங்கள், தொழில்நெருக்கடி ஏற்படும்போது வட்டியை கட்ட முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்' என்கிறார் காட்மா குறுந்தொழில்சங்கத் தலைவர் எஸ்.ரவிக்குமார்.

 தீர்வு கிடைக்குமா? "சர்வதேச பொருளாதார நெருக்கடி, ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர் மின்வெட்டு ஆகிய பிரச்னைகளால் இப்போது குறுந்தொழில்கூடங்கள் மூடக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலையும் தொடர முடியாமல், கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன. ஆனால், தனியார் வங்கிகள் குண்டர் படைகளை தொழில்கூடங்களுக்கும், வீடுகளுக்கும் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகின்றனர். காவல் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் குண்டர் படையினர் போலீசாரை சரிகட்டிவிடுகின்றனர்.

 கடந்த 6 மாதங்களில் 100-க்கும் மேற்பட்ட மிரட்டல் சம்பவங்கள் நடந்தும், இதுவரை ஒரு வங்கி மீது கூட போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கிக் கணக்கு துவங்கவும், வட்டியில்லா அல்லது நீண்டகால கடன் வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்கிறார் தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க கோவை மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ்.

 வங்கிகளுக்கு அறிவுரை"குறுந்தொழில்களுக்கு நடப்புக் கணக்கு துவக்கக்கோரி கோவை மாவட்டத்தில் உள்ள 525 தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நடைமுறை சிக்கல்களால் வங்கிகள் கணக்குத் துவக்க முன்வருவதில்லை. குறுந்தொழில்முனைவோர்களை தனியார் வங்கிகள் மிரட்டுவதாக பல புகார்கள் வந்துள்ளன. ரிசர்வ் வங்கி விதிகளுக்கு மாறாக குண்டர் படையை அனுப்பும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை துவங்கும்' என்கிறார் முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.நந்தகோபால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.