ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

மலைவாழ் கிராமங்களை ஊராட்சிகளுடன் இணைக்கக் கோரிக்கை

ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டிய பல மலைவாழ் குடியிருப்புகள் பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அரசின் வீடுகட்டும் திட்டங்கள்

Updated On :22 டிசம்பர் 2015, 11:03 pm

ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டிய பல மலைவாழ் குடியிருப்புகள் பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அரசின் வீடுகட்டும் திட்டங்கள் கிடைக்காமல் உள்ளன. அதனால், ஊராட்சிகளுடன் இணைக்க மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகம், உலாந்தி வனச்சரகத்தையொட்டி 23-க்கும் அதிகமான மலைவாழ் குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. சுமார் 3,000 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வனப் பகுதியையொட்டியும், வனப்பகுதிக்கு வெளியேயும் வசித்து வருகின்றனர்.

 இதில், கோட்டூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புளியங்கண்டி, சின்னார்பதி, நவமலை, கீழ்பூனாச்சி, மரப்பாலம், ஆழியாறு வாய்க்கால்மேடு, ஆழியாறு எல்.எஃப் காலனி, நெல்லித்துறை, சின்னார்பதி, மண்ணம், ஜெ.ஜெ.நகர், பந்தக்கல் அம்மன்பதி ஆகிய கிராமங்கள் உள்ளன.

 வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் டாப்சிலிப், கோழிகமுத்தி, எருமைப்பாறை, சின்னார், சேத்துமடை அண்ணாநகர், தம்மம்பதி, சரளப்பதி, சுள்ளிப்பதி உள்ளிட்ட கிராம குடியிருப்புப் பகுதிகளும் உள்ளன.   ஒடையகுளம் பேரூராட்சிப் பகுதியில், பாறைப்பதி, சுள்ளிமேட்டுப்பதி, மாணிக்கமூலை, பசுவத்துறை உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன.

 இந்த 23 கிராம குடியிருப்புகளும் பேரூராட்சிப் பகுதியில் இணைக்கப்பட்டிருந்தும், அடிப்படை வசதிகளான வீடு, சுத்தமான குடிநீர், மின்சாரம் என எதுவும் கிடைக்கவில்லை என்பது இப்பகுதி மலைவாழ் மக்களின் புகாராக உள்ளது.

  ஊராட்சிப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடு இல்லாத மக்களுக்கு சூரிய ஒளி மின்சாரத்துடன் கூடிய பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்கிறது.

 ஆனால், ஆனைமலை புலிகள் காப்பகத்தையொட்டி உள்ள பகுதிகள் பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் மலைவாழ் மக்களுக்கு வீடு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், 3,000 குடும்பங்கள் தவித்து வருகின்றனர். ஊராட்சிப் பகுதிகளில் இருக்கும் கிராமங்கள் கூட தரம் உயர்ந்து சாலை வசதி, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் இருந்து வருகிறது.

 ஆனால், இந்த 23 கிராமங்கள் எந்தவித அடிப்படை வசதிகள் இல்லாத நிலையிலும், பேரூராட்சியுடன் இணைக்கப்பட்டு தரம் உயர்ந்துள்ளதுபோல் காட்டப்பட்டு வருவதற்கான காரணம் புரியவில்லை என மக்கள் கூறுகின்றனர். கிராமப் பகுதிகளை ஊராட்சிப் பகுதிகளுடன் இணைக்க வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

 இது குறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் கூறுகையில், அடிப்படை வசதிகளே இல்லாமல் 23-க்கும் அதிகமான கிராமங்கள் பேரூராட்சிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் பசுமை வீடு, இந்திரா குடியிருப்பு உள்ளிட்ட திட்டங்கள் கிடைக்கவில்லை. எனவே, ஒடையகுளம், வேட்டைக்காரன்புதூர், கோட்டூர் பேரூராட்சிப் பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ள மலைவாழ் கிராமப் பகுதிகளை ஊராட்சிகளுடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.