மூலத்தரா அணை கால்வாயை நீட்டிக்கும் விவகாரம்: எம்எல்ஏ தலைமையில் தர்னா போராட்டம்
கேரளவாழ் தமிழர் பகுதிகளுக்கு மூலத்தரா அணையின் வலது கால்வாய் நீட்டிப்புக்கு நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயியைக் கண்டித்து சித்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் அப்பகுதி மக்கள் சுமார் 2,000 பேர் பாலக்காடு மாவட்டம், ஆர்.வி.புதூரில் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளவாழ் தமிழர் பகுதிகளுக்கு மூலத்தரா அணையின் வலது கால்வாய் நீட்டிப்புக்கு நிலம் கொடுக்க மறுக்கும் விவசாயியைக் கண்டித்து சித்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் தலைமையில் அப்பகுதி மக்கள் சுமார் 2,000 பேர் பாலக்காடு மாவட்டம், ஆர்.வி.புதூரில் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரம்பிக்குளம்-ஆழியாறு (பி.ஏ.பி) திட்டத்தில் இருந்து கேரளத்துக்கு ஆண்டுதோறும் 7.25 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கேரள நீர்ப்பாசனத்துறை தமிழகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை தமிழக-கேரள எல்லையில் உள்ள மூலத்தரா அணையின் வலது, இடது கால்வாய்கள் மூலம் பாசனம், குடிநீருக்கு வழங்கப்படுகிறது.
அதில், வலது கால்வாய் மூலம் தற்போது 14கி.மீ., நீளத்தில் ஆர்.வி. புதூர் கோரையாறு பகுதி வரை உள்ள பல பகுதிகள் பாசனம் பெற்று வருகிறது. அந்த வாய்க்காலை மேலும் வேலந்தாவளம் வரை 14 கி.மீ. நீட்டிப்பு செய்தால் கேரளத்தின் வறட்சியான கொழிஞ்சாம்பாறை, எரித்தேன்பதி, வடகரப்பதி ஆகியஸ ஊராட்சிகளில் வசிக்கும் 75 ஆயிரம் மக்களுக்கு குடிநீரும், 13 ஆயிரத்துக்கும் அதிகமான ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதியும் பெறும்.
மூலத்தரா அணையின் வலது கால்வாயை மூன்று ஊராட்சிகள் வரை நீட்டித்து தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, கேரள முதல்வர் உம்மன்சாண்டி வடகரப்பதி, கொழிஞ்சாம்பாறை, எரித்தேன்பதி ஆகிய தமிழர் பகுதிகளின் பிரதிநிதிகளை அழைத்து கடந்த ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாயை நீட்டிக்க அனுமதியளித்தார்.
மேலும் முதற்கட்டமாக 6.2 கி.மீ., தூரத்துக்கு கால்வாயை நீட்டிக்க தேவைப்படும் ரூ.50 கோடியே 6 லட்சம் நிதியையும் அவர் ஒதுக்கினார். இதையடுத்து, கால்வாய் செல்லும் பகுதிகளை அளவீடு செய்யும் பணிகள் துவங்கின. அதில் மொத்தம் 50 விவசாயிகளின் நிலங்கள் வழியாக கால்வாய் செல்ல வேண்டியுள்ளதால், அந்த விவசாயிகளை அழைத்து மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது. அதில், நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.13 லட்சம் வீதம் நஷ்ட ஈடு வழங்குவதாக தெரிவித்தனர். இதையடுத்து 46 விவசாயிகள் நிலம் கொடுக்க சம்மதம் தெரிவித்தனர்.
இதனிடையே, ஆர்.வி.புதூரைச் சேர்ந்த அழகிரிசாமி என்ற விவசாயி நிலத்தை தர மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால், கால்வாய் வெட்டும் பணி தொடங்கப்படாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதைக்கண்டித்து, சித்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அச்சுதன் தலைமையில் விவசாயிகள் சங்கத் தலைவர் கோபால்சாமி, கொழிஞ்சாம்பாறை ஊராட்சித் தலைவர் தணிகாசலம், விவசாயப் பிரதிநிதிகள் செல்லக்குமாரசாமி, சுமேஷ், பொன்ராஜ், கணேஷ் உள்ளிட்ட சுமார் 2,000 பேர், ஆர்.வி.புதூரில் சனிக்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

