கோவை அரசு மருத்துவமனையில் காவலர் பற்றாக்குறை: கேள்விக்குறியாகும் நோயாளிகளின் பாதுகாப்பு

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர் பற்றாக்குறையால் நோயாளிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் காவலர் பற்றாக்குறை: கேள்விக்குறியாகும் நோயாளிகளின் பாதுகாப்பு
Updated on
2 min read

கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர் பற்றாக்குறையால் நோயாளிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
 கோவை அரசு மருத்துவமனையில் சுமார் 1,500-க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மட்டுமின்றி ஈரோடு, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகளும் அன்றாடம் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும், உள் நோயாளிகளின் உறவினர்கள் என மொத்தம் நாள்தோறும் அரசு மருத்துவமனைக்கு சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
 இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தில் போதிய காவலர்கள் பணியில் இல்லாததால் அறிக்கை தயார் செய்தல் உள்ளிட்ட அன்றாடப் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கும் முன்னர் புறக்காவல் நிலையத்துக்கு சுழற்சி முறையில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர்.
 இந்த நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகவே புறநகர் பகுதிகளில் இருந்து காவலர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை.  இதன் காரணமாக, மாநகர காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து சுழற்சி முறையில் ஒரு வேளைக்கு சிறப்பு உதவி ஆய்வாளர், காவலர் என இருவர் மட்டுமே பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
 இதனால், கோவை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் சாலை விபத்து, உயர் சிகிச்சை, இடர்பாடுகளில் சிக்கி மேல் சிகிச்சை, பாம்புக்கடி உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்கு வரும் நபர்கள் குறித்த விவரங்களை அறிக்கையாகத் தயார் செய்து வருவதில் காலதாமதம் ஏற்படுகிறது.
 மேலும், சாலை விபத்துகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டவர் அல்லது உயிரிழந்தவர் குறித்து விவரங்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்குத் தெரிவிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் விபத்துகளில் உயிரிழந்தவர் குறித்த விவரங்கள் தாமதமாகவே தெரியப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 அதே போல், புறக்காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசியும் மருத்துவமனை நிர்வாகத்தின் வசதிக்காக சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்துக் கொள்ளப்பட்டது.
 இதைத்தொடர்ந்து, புறக் காவல் நிலையத்துக்கு வழங்கப்பட்ட செல்லிடப்பேசி எண்களும் சரிவர செயல்படுவதில்லை. இதனால், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு:   கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்கள் மட்டுமின்றி குற்றச் சம்பவங்களும் நடைபெறுகின்றன. மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் திருடப்படுவதுடன், நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் உடைமைகளையும் மர்ம நபர்கள் சிலர் திருடிச்செல்வதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
 இதனிடையே, கடந்த மாதம் இந்து முன்னணி நிர்வாகி ஒருவர் தீக்குளித்து சிகிச்சையில் இருந்தபோது அவரது சகோதரர் மருத்துவமனை வளாகத்திலேயே பாட்டிலால் வயிற்றில் குத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
 அதே போல், கூலித் தொழிலாளி ஒருவர் கத்திக் குத்தில் காயமடைந்து சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது அவரைக் குத்திய நபரை அவரது மகன் கத்தியால் குத்தி பழிக்குப்பழி வாங்கிய சம்பவங்களும் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றன.      ஆகவே, புறக்காவல் நிலையத்தில் ஒரு வேளைக்கு குறைந்தது 5 காவலர்களையாவது பணிக்கு அமர்த்தி தகவல் அறிக்கைகள் விரைவாகத் தயார் செய்யவும், ரோந்துப் பணியை அதிகரித்து மருத்துவமனை வளாகத்தில் நடைபெறும் குற்றச் சம்பவங்களைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.
 மேலும், நோயாளிகளின் வசதிக்காக புறக்காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண் வைக்கவும் காவல் துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
 இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்,கடந்த சில ஆண்டுகளாகவே புறநகர் காவல் நிலையங்களில் இருந்து காவலர்களைப் பணிக்கு அனுப்புவதில்லை. இதனால் மாநகர காவல் நிலையங்களில் இருந்து சில காவலர்கள் மட்டுமே இரு வேளைகளில் பணியில் இருப்பதால் பாதுகாப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது.
 அதே சமயத்தில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், வாரம் ஒரு முறை வெவ்வேறு காவல் நிலையத் இருந்து 5 காவலர்கள் பகல் வேளைகளில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கவும், புறக் காவல் நிலையத்தில் தொலைபேசி அல்லது செயல்படும் வகையில் செல்லிடப்பேசி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com