ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பொள்ளாச்சி பகுதியில் வளர்க்கப்படும் சண்டைக் கிடாய்கள்!

பொள்ளாச்சிப் பகுதியில் சண்டை கிடாய்கள் வளர்க்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் பொள்ளாச்சி பகுதியில் கிடாய் சண்டை விளையாட்டும் நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.

Updated On :4 பிப்ரவரி 2017, 12:12 am

பொள்ளாச்சிப் பகுதியில் சண்டை கிடாய்கள் வளர்க்க விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்கள் பொள்ளாச்சி பகுதியில் கிடாய் சண்டை விளையாட்டும் நடத்தவும் திட்டமிட்டு வருகின்றனர்.
  தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகாசி, சிவகங்கை, கம்பம், தேனி ஆகிய பகுதிகளில் சண்டை கிடாய்கள் வளர்க்கப்பட்டு வந்தன. கரிஞ்சி எனப்படும் கம்பீர தோற்றமும், உடல் வலிமையும் கொண்ட இந்த கிடாய்கள் சண்டை விளையாட்டுக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தன.
ஜல்லிக்கட்டு, ரேக்ளா ஆகிய போட்டிகளுக்குப் பயன்படுத்த காளைகளை  அதிக கவனம் எடுத்தும் வளர்ப்பது போலவே இந்தக் கரிஞ்சி கிடாய்களும் வளர்க்கப்படுகின்றன.
  2014-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்ட பிறகு கிடாய் சண்டை விளையாட்டும் நிறுத்தப்பட்டது. சண்டை விளையாட்டுக்காக வளர்க்கப்படும் கிடாய்களை அதன் உரிமையாளர்கள் மாமிசத்துக்கு பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. இதனால், கிடாய் சண்டை நிறுத்தப்பட்ட பிறகு இந்த வகை கிடாய்களும் அழிவை நோக்கியே சென்றன.
  கோவை மாவட்டத்தில் இதுபோன்ற சண்டை கிடாய்கள் வளர்ப்பு அதிக அளவில் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில் சண்டை கிடாய்கள் வளர்ப்பதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
  பொள்ளாச்சி சுற்றுப் பகுதியில் அம்பராம்பாளையம், ஆழியாறு, கோட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் அதிகமான சண்டைக் கிடாய்கள் வளர்க்கப்படுகின்றன. கோவை மாவட்டம் முழுவதும் 70 முதல் 80 கிடாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன.
  சண்டைக் கிடாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் இருந்தாலும் பல சிரமங்கள் உள்ளன. இவை மற்ற ஆடுகளை போல் 10 ஆண்டுகள் வரை உயிர்வாழும் தன்மை இருந்தாலும், ஒரு குட்டி மட்டுமே ஈனும். 7 மாதம் வயதுடைய சண்டைக் கிடாய்க்கு தினமும் 2 கி.மீ. நடைப்பயிற்சி, 15 நிமிடம் நீச்சல் பயிற்சி, வாரங்களில் சில நாள் சண்டைப் பயிற்சி என பயிற்சியளித்து வருகின்றனர்.
  பருத்தி, உளுந்து, மசால் புற்கள், அகத்திக்கீரை, மக்காச்சோளம், கம்பு, ராகி போன்றவை உணவாக வழங்கப்படுகிறது.
  இவற்றைப் பராமரிக்க அதிக செலவு செய்யவேண்டியுள்ளதால் சிலர் மட்டுமே தற்போது பொள்ளாச்சி பகுதியில் வளர்த்து வருகின்றனர். நன்கு சண்டைப் பயிற்சி பெற்ற கிடாயின் அருகில் புதிய நபர்கள் சென்றால் ஆபத்தில் முடியும் என்கின்றனர் இதன் வளர்ப்பாளர்கள்.
 சண்டை கிடாய் வளர்க்கும் ஜாகிர்உசேன், சேது ஆகியோர் கூறுகையில், நமது பாரம்பரிய இனத்தில் ஒன்றுதான் இந்த கரிஞ்சி சண்டைக் கிடாய். மதுரை, திண்டுக்கல் போன்ற தென்மாவட்டங்களில்தான் இவை அதிகம் வளர்க்கப்பட்டு வந்தன. இந்த வகை இனம் அழிந்து வருவதால் அவற்றை அழிவில் இருந்து காக்க நாங்கள் தற்போது பொள்ளாச்சி பகுதியில் வளர்த்து வருகிறோம். பொள்ளாச்சி பகுதியில் அதிகமானோர் இந்த கிடாய்களை வளர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.
 ஜல்லிக்கட்டுக்குப் பிறகு கிடாய் சண்டையும் நின்றுபோனதால், இவற்றை சண்டை விளையாட்டில் ஈடுபடுத்தவில்லை. தற்போது ஜல்லிக்கட்டுக்கு தடை நீங்கியுள்ளதால், கிடாய் சண்டை விளையாட்டுக்கும் அனுமதி உள்ளதாகவே கருதுகிறோம். அரசிடம் கலந்துபேசி விரைவில் பொள்ளாச்சி பகுதியிலும் கிடாய் சண்டை விளையாட்டை நடத்தவோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.