ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி நிலவியும், வனத் துறையினர் தீத்தடுப்பு கோடுகள் அமைக்காமல் உள்ளதால் பெரிய தீ விபத்துகள் ஏற்பட்டு தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு உள்ளிட்ட அரிய வன உயிரினங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆனைமலை புலிகள் காப்பகம் 958 ச.கி.மீட்டர் பரப்பு கொண்டது. இது திருப்பூர், பொள்ளாச்சி என இரண்டு கோட்டங்களாகவும், பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை, உடுமலை, அமராவதி ஆகிய 6 வனச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.
இங்கு, புலி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, செந்நாய், கரடி, பல வகையான மான்கள், பறவைகள், தமிழகத்தின் மாநில விலங்கான வரையாடு உள்ளிட்ட பல வன விலங்குகள் வசித்து வருகின்றன. மூலிகை செடிகள், பல அரிய வகை மரங்களும் உள்ளன.
இந்த ஆண்டு தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைகள் பொய்த்துவிட்டதால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சி நிலவுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்தை உள்ளடக்கிய ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மழைப் பொழிவு குறைந்துள்ளது.
இதனால், காப்பகம் கடுமையான வறட்சியில் சிக்கியுள்ளது. வனப் பகுதிக்குள் உள்ள 85 சதவீதம் ஓடைகள், காட்டாறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. வனப் பகுதிக்குள் உள்ள சோலையாறு அணையும் வற்றிவிட்டது. 3 அடிக்கு மட்டுமே நீர் உள்ளது. பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட அணைகளிலும் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டது. யானை உள்ளிட்ட வன விலங்குகள் உணவு கிடைக்காமல் அவதிப்படும் நிலை உள்ளது.
இந்நிலையில், வன உயிரினங்களுக்கு உள்ள மிகப்பெரிய ஆபத்தாக இருப்பது வனத்தில் ஏற்படும் தீ ஆகும். கடுமையான வறட்சி காலங்களில் சில சமூக விரோதிகள் தீ வைப்பது, வனப் பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் செல்பவர்கள் சிகரெட், பீடி போன்றவற்றை நெருப்புடன் வீசிச்செல்வது, இயற்கையான முறையில் மரங்களுக்குள் ஏற்படும் உராய்வுகளால் தீ பிடிப்பது என பல காரணங்களால் வனப் பகுதிக்குள் தீ விபத்து ஏற்படும்.
இப்படி ஏற்படும் தீ வனப் பகுதியில் வறட்சியான காலங்களில் பெரிய அளவில் பல பரவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சமயங்களில் வன உயிரினங்கள் தீயில் பலியாகிவிடும். குறிப்பாக சிறிய விலங்குகள், ஊர்வன, வன உயிரினங்களின் குட்டிகள், பல வகை மரங்கள், மூலிகைகள் என தீயின் கோரப் பிடியில் சிக்கி உயிரிழக்க நேரிடும்.
இதுபோன்று வனப் பகுதியில் தீ பிடிப்பதை கட்டுப்படுத்த தீத்தடுப்பு கோடுகள் வனத்துறையால் அமைக்கப்படும். இந்த தீத்தடுப்பு கோடுகள் வனப் பகுதியில் பல்வேறு இடங்களில் 5 முதல் 6 மீட்டர் அகலத்துக்கு அமைக்கப்படும். இந்தக் கோடு அமைக்கும்போது, வனப் பகுதியில் தீ பிடித்தால் அது மற்றப் பகுதிக்கு பரவமால் தடுக்கப்படும். ஒவ்வோர் ஆண்டும் வறட்சிக் காலங்களில் தீத்தடுப்பு கோடுகள் வனத் துறையினர் அமைத்துவருகின்றனர்.
இந்த ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கடுமையான வறட்சியால் மரங்களில் இலைகள் உதிர்ந்தும், செடிகள், புற்கள் காய்ந்தும், மூங்கில்கள் காய்ந்தும் காட்சியளிக்கின்றன. ஒரு சிறிய அளவிலான தீ ஏற்பட்டால் கூட மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுவிடும். வனப் பகுதி கடுமையான வறட்சியில் உள்ள நிலையிலும் வனத் துறையினர் தற்போதுவரை தீத் தடுப்பு கோடுகள் அமைக்கவில்லை.
மாநில விலங்கு:
தமிழகத்தின் மாநில விலங்காக கருதப்படும் நீல்கிரிதார் எனப்படும் வரையாடுகள் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அதிகமாக உள்ளன. இந்த வகை ஆடுகள் வாழ மிக உயரமான மலைப் பகுதி, நீண்ட புல்வெளிகள், மனிதர்கள் இடையூறு இல்லாமல் இருத்தல் போன்றவை மிகவும் முக்கியம். வரையாடுகள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ளது. வரையாடுகளை மனிதர்கள் காண்பது அரிது என்றாலும், பொள்ளாச்சி-வால்பாறை சாலையில், 8,9,10 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் எளிதில் பார்க்கமுடிகிறது. வரையாடுகள் ஆனைமலைபுலிகள் காப்பகம், நீலகிரி, மூணாறு போன்ற இடங்களில் மட்டுமே சொற்பமான எண்ணிக்கையில் உள்ளன. வரையாடு அழிந்து வரும் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
இப்படி தமிழக மாநில விலங்காக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வரும் வரையாடுகள் எளிதில் இடம்பெயரும் தன்மையில்லாததால் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் தப்பிக்க முடியாமல் அழியும் வாய்ப்புள்ளது. ஆகவே நமது மாநில விலங்கை பாதுகாக்கவும், மற்ற வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனத் துறையினர் தீத்தடுப்பு கோடுகளை விரைந்து அமைக்கவேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து வனஉயிரின ஆர்வலர் சுரேஷ் கூறுகையில், "எங்குமே காண கிடைக்காத வரையாடுகளை வால்பாறை சாலையில் எளிதாக பார்க்கமுடிகிறது. இவை அழிவின் விளிம்பில் இருந்து வருகின்றன. தற்போது, ஆனைமலை புலிகள் காப்பக வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் தீ விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. இதில் வரையாடு உள்ளிட்ட எந்த வன உயிரினமும் அழியாமல் பாதுகாக்கவேண்டியது வனத் துறையின் கடமை. ஆகவே தீத்தடுப்பு கோடுகள் அமைக்க வனத் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ரவிச்சந்திரன் கூறுகையில், "வனப் பகுதியில் வறட்சி நிலவுவதால் ஓரு சில நாள்களில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி துவங்கும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

