கனவுத் திட்டமான அருங்காட்சியகத்தை திறந்துவிட்டுச் செல்வாரா காவல் ஆணையர்?
கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், தனது கனவுத் திட்டமான காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து விட்டுச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது மாநகர போலீஸாரிடையே எழுந்துள்ளது.


கோவை மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ், தனது கனவுத் திட்டமான காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து விட்டுச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது மாநகர போலீஸாரிடையே எழுந்துள்ளது.
கோவை மாநகர காவல் ஆணையராக 2015-ஆம் ஆண்டு நவம்பர் 6-ஆம் தேதி அ.அமல்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பின்னர் மாநகர காவல் துறையில் பல்வேறு மாற்றங்களையும் கொண்டுவந்தார். அதிலும் குறிப்பாக காவல் ஆணையர் அலுவலகத்தில் இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டடங்களைச் சீரமைத்தும், நவீன கட்டுப்பாட்டு அறை, காவலர் உணவு விடுதி நவீன மயமாக்கல், ஆணையர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நவீனக் கழிப்பிடம், ஏடிஎம் மையம் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகளில் இவரது பங்கு மிகவும் இன்றியமையாததாக இருந்து வந்துள்ளது.
காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம், போக்குவரத்துச் சிறுவர் பூங்கா, காவலர்களுக்கான உடற்பயிற்சிக் கூடம் போன்றவற்றை செயல்படுத்தினார். மேலும் ,மாநகரில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் வணிக வளாகங்கள், வீடுகள், அரசு மற்றும் தனியார் வங்கிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கும் பணியையும் மேற்கொண்டார். இவர் திருட்டு,, வழிப்பறி வழக்குகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை சாலை விபத்துகளுக்கும் கொடுத்துவந்தார். இதனால் ஒரு சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் கணிசமாகக் குறைந்துள்ளன.
கனவுத் திட்டமான காவல் அருங்காட்சியகம்: கோவை ரயில் நிலையம் அருகே 1918-ஆம் ஆண்டு ஆங்கிலேயரான ஹாமில்டனால் கட்டப்பட்டு, சில ஆண்டுகளாகப் பராமரிப்பில்லாமல் இருந்த கிளப்பை புதுப்பித்து காவல் அருங்காட்சியகமாக மாற்றத் திட்டமிட்டார். இதற்கான பணிகளை அவர் பொறுப்பேற்ற 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தொடங்கினார்.
இதில், காவலர்களுக்கான ஓய்வு விடுதிகள் கட்டிமுடிக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்த அருங்காட்சியகத்தில் போலீஸார் பயன்படுத்திய ஆயுதங்கள், துப்பாக்கிகள், காவலர்களுக்கான சீருடைகள், போலீஸார் பயன்படுத்திய வாகனங்கள், சந்தனக் கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் பயன்படுத்திய துப்பாக்கிகள், பழங்கால பீரங்கிகள், கள்ள நோட்டு தயாரிக்கும் இயந்திரம், விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட லேத் இயந்திரம் போன்ற பல அரிய பொருள்களையும் பெற்று காவல் அருங்காட்சியகத்தில் இடம்பெறச் செய்தார்.
இறுதியாக கொச்சியில் இருந்து 2 ஆகாஷ் ஏவுகணைகளும் சில நாள்களுக்கு முன்னர் அருங்காட்சியகத்துக்கு வரவழைக்கப்பட்டன. மேலும், தில்லியில் இருந்து மிக் 21 ரக போர் விமானமும் கொண்டு வரப்பட்டது. இதன் திறப்பு விழாவை நவம்பர் இறுதிக்குள் நடத்த மாநகர போலீஸாரும் மிகுந்த ஒத்துழைப்பையும் அளித்து வந்தனர்.
அதிலும் குறிப்பாக உளவுப் பிரிவைச் சேர்ந்த இரு ஆய்வாளர்கள் காவல் அருங்காட்சியகத்திலேயே பணி அமர்த்தப்பட்டனர். அவர்களும் காவல் அருங்காட்சியகத்தின் இறுதிக் கட்ட வேலைகளைக் கண்காணித்து, உடனுக்குடன் அவருக்குத் தகவல் தெரிவித்து வந்தனர். அதே வேளையில், அமல்ராஜும் காலை, இரவு வேளைகளில் அந்த அருங்காட்சியகத்தை நேரில் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி வந்துள்ளார்.
காவல் ஆணையர் திடீர் இடமாற்றம்: இதனிடையே, அருங்காட்சியகத் திறப்பு விழாவுக்கு சில நாள்கள் உள்ள நிலையில், காவல் ஆணையர் அ.அமல்ராஜ் திருச்சி ஆணையராக செவ்வாய்க்கிழமை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
ஒரு சில நாள்களில் திருச்சி காவல் ஆணையராகப் பெறுப்பேற்கும் முன்னர் கனவுத் திட்டமான காவல் அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்துவிட்டுச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பும் மாநகர காவல் துறையினரிடையே எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...