
சாலை மேம்பாட்டுப் பணி: மேட்டுப்பாளையத்தில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
மேட்டுப்பாளையத்தில் காரமடை சாலைப் பகுதியில் பாலம் கட்டுதல் உள்ளிட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக திங்கள்கிழமை
மேட்டுப்பாளையத்தில் காரமடை சாலைப் பகுதியில் பாலம் கட்டுதல் உள்ளிட்ட சாலை மேம்பாட்டுப் பணிகளுக்காக திங்கள்கிழமை முதல் 30 நாள்களுக்கு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டுப்பாளையம் நகரில் அன்னூர் சாலை, காரமடை சாலை, உதகை சாலை ஆகியவை வாகன போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தச் சாலைகளின் வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால், விரைவில் பழுதடைவதுடன், போக்குவரத்து நெரிசலும் அதிகம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் அபிராமி திரையரங்கு முதல், உதகை சாலை கல்லாறு வரை ரூ. 36 கோடி மதிப்பில் 10 கி.மீ. தொலைவுக்கு சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கப்பட்டன. இதில் 7 மீட்டர் அகலத்தில் உள்ள சாலை 10 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்பட்டு, அந்தச் சாலை வழியே 4 சிறு பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது காரமடை சாலையில் சார் பதிவாளர் அலுவலகம் அருகிலும், ஜிஎம்ஆர்சி பிரிவிலும் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒருபக்கம் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தாலும், அதில் மறுபுறம் வாகனங்கள் செல்ல போக்குவரத்துக்காக அனுமதிக்கப்பட்டது.
ஆனால், கட்டுமானப் பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதைக் கருத்தில்கொண்டு மேட்டுப்பாளையம் நகரில் திங்கள்கிழமை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மேட்டுப்பாளையம், காரமடை சாலையில் இரு இடங்களில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில்கொண்டு திங்கள்கிழமை முதல் நகரப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் காரமடை சாலையில் இருந்து அபிராமி திரையரங்கு எதிரே உள்ள கோ-ஆபரேடிவ் காலனி வழியாக அன்னூர் சாலைக்கு வந்து, பேருந்து நிலையம் செல்லவேண்டும்.
அதேபோல, மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை செல்லும் வாகனங்கள் அன்னூர் சாலை வழியாகச் சென்று தீயணைப்பு நிலையப் பிரிவு, எடையார்பாளையத்தைக் கடந்து சிடிசி டெப்போ பின்புறம் உள்ள சாலை வழியே காரமடை சாலையை அடைந்து, கோவை செல்ல வேண்டும். இந்தப் போக்குவரத்து மாற்றம் இன்று முதல் 30 நாள்களுக்கு அமலில் இருக்கும்.
பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் அசெளரியங்களை பொறுத்து, தங்களது முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






