தமிழக முதல்வருக்கு குண்டு மிரட்டல்: கோவையில் காவலாளி கைது

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவின்போது  குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த காவலாளியை  புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
Published on
Updated on
1 min read

சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் சுதந்திர தினவிழாவின்போது  குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த கோவையைச் சேர்ந்த காவலாளியை  புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் புதன்கிழமை காலை தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதால் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் தேசியக் கொடியை ஏற்ற முடியாது என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கோவையில் இருந்து பேசுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்துள்ளார். 
இதையடுத்து சென்னை போலீஸார், கோவை போலீஸாரைத் தொடர்பு கொண்டு கோவையில் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட செல்லிடப்பேசி எண்ணை கொடுத்துள்ளனர். அந்த செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தியதில்,  ரேஸ்கோர்ஸ் அருகே ஹுசூர் சாலையில் இருந்து செல்லிடப்பேசி மூலம் அழைப்பு சென்றது தெரியவந்தது. 
சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், திருநெல்வேலி மாவட்டம், குருக்கள்பட்டியைச் சேர்ந்த மாரிராஜன் (42) என்பவரைக் கைது செய்தனர். இவர், கோவை,  பாலசுந்தரம் சாலையில் உள்ள தனியார் பாதுகாப்பு (செக்யூரிட்டி) நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 
ஹுசூர் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்கான கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பகுதியில் புதன்கிழமை காவலாளியாக அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சென்னை காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. 
இதையடுத்து மாரிராஜன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 (பி), 506, 507 ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கோவை 3 ஆவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.