பக்க விளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகளுக்கான தேடல் சர்வதேச அளவில் அதிகரித்திருப்பதாக சத்தீஸ்கர் அமிடி பல்கலைக்கழக வேந்தர் வில்லியம் செல்வமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறை, அஸ்ஸாம் ராணுவ பாதுகாப்பு, மேம்பாட்டு கூட்டமைப்பின் பாதுகாப்பு ஆராய்ச்சி ஆய்வகம் ஆகியவை இணைந்து நடத்தும் மூலிகை மருத்துவம் தொடர்பான 3 நாள் சர்வதேச கருத்தரங்கு, பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை தொடங்கியது.
பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் பேராசிரியர் என்.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சத்தீஸ்கர் அமிதி பல்கலைக்கழக வேந்தர் வில்லியம் செல்வமூர்த்தி கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் டி.பரிமேலழகன் வரவேற்றார்.
கருத்தரங்கில், பேராசிரியர் ஜெயக்குமார் பேசும்போது, பண்டைய காலம் தொட்டு நம் மக்கள் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் என்ற பெயரில் மூலிகை மருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது உலக நாடுகளிடம் இந்திய மூலிகை மருத்துவத்தை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் மேலிட்டு வருகிறது. இதை சரிவர பயன்படுத்திக் கொண்டால் மூலிகை பொருள்கள் வர்த்தகத்தின் மூலம் நாம் அந்நிய செலாவணியை ஈட்டுவதுடன், நம் கிராமப்புற பொருளாதாரத்தையும் மேம்படுத்திக் கொள்ள முடியும் என்றார்.
அமிடி வேந்தர் செல்வமூர்த்தி பேசும்போது, பக்க விளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகளுக்கான தேடல் உலக அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, சர்வதேச அளவில் பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மூலிகை மருந்துகள் தயாரிப்பதில் தற்போது முனைப்பு காட்டி வருகின்றன.
மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வேதியியல், மூலக்கூறு உயிரியல், உயிரி தொழில்நுட்பவியல் ஆகியவற்றின் உதவியுடன் மூலிகைகளின் செயல்பாட்டு மூலக்கூறுகளை வலுப்படுத்தி, பல்வேறு கொடிய நோய்களுக்கு எதிராக புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆய்வின் மூலம் மக்களுக்கு பயனுள்ள வகையில் புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதே ஆராய்ச்சியின் உண்மையான நோக்கமாகும் என்றார் அவர்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.மணியன் பேசும்போது, உலகில் உள்ள 17 பல்லுயிர் மையங்களில் இந்தியாவும் ஒன்று. இயற்கை மருத்துவத்தின் தாயகமாக இந்தியா விளங்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மூலிகைகளைக் கொண்டு தொழுநோய் போன்ற கொடிய வியாதிகளைக் கூட எளிதாகத் தீர்த்துவிட முடியும்.
வளர்ந்து வரும் நாடுகளை ஒப்பிடும்போது, இந்தியா மூலிகை மருத்துவத் துறையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மூலிகை மருந்துகளை கண்டுபிடிப்பதிலும், மூலிகைகளைப் பாதுகாப்பதிலும், இயற்கைச் சூழலை பேணுவதிலும்தான் நமது ஆரோக்கியமான எதிர்காலம் அடங்கியுள்ளது என்றார்.
கருத்தரங்கில், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஹெய்டி ஆப்ரகம்ஸ், பிரேசில் பேராசிரியர் அட்ரியானாவ், அமெரிக்க பேராசிரியர் பிரகாஷ் நக்ராகட்டி, பாதுகாப்பு ஆராய்ச்சி, ஆய்வகத்தின் இயக்குநர் சஞ்ஜெய் கே.திரிவேதி, பேராசிரியர்கள் ராஜேந்திரன், மோகன், சரவணசெல்வன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மூலிகை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள், மூலிகை மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குன்னூரி தேயிலைத் தோட்டங்களில் யானைகள் நடமாட்டம்
பாலியல் குற்ற வழக்கில் தொழிலாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை
காா் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காத்திருப்புப் போராட்டம்
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


