கோவை அரசு கலைக் கல்லூரியில் 2018-19 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 6) தொடங்கியது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 22 இளநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 1,350 இடங்கள் உள்ளன. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் கடந்த ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட்டது. மொத்தம் 14 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையான நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட 7,050 விண்ணப்பங்கள் பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகு பெறப்பட்டன.
இதையடுத்து மதிப்பெண்கள் கணக்கீடு செய்யப்பட்டு, கடந்த 1ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறப்புப் பிரிவினருக்கான (முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், என்.சி.சி., விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள்) கலந்தாய்வு புதன்கிழமை நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகளுக்கு 70 இடங்கள் இருக்கும் நிலையில் 16 மாணவ, மாணவியர் மட்டுமே பங்கேற்றனர். இதில் அனைவரும் தங்களுக்கான இடங்களைத் தேர்வு செய்தனர். என்.சி.சி. பிரிவினருக்கு ஒரு இடம் இருக்கும் நிலையில் அதற்கு 62 பேர் போட்டியிட்டனர்.
முன்னாள் ராணுவத்தினருக்கு 6 இடங்களுக்கு 12 பேரும், விளையாட்டுப் பிரிவினரினருக்கான 42 இடங்களுக்கு 130 பேரும் போட்டியிட்டனர்.
சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான 54 இடங்கள் காலியாக உள்ளன. பொதுப்பிரிவினருக்கு வியாழக்கிழமை கலந்தாய்வு தொடங்கும் நிலையில், அதற்கு முன்னதாக யாரேனும் மாற்றுத் திறனாளிகள் வந்தால் அவர்களுக்கு இடம் வழங்கப்படும் என்றும் இல்லாவிட்டால் அந்த இடங்கள் பொதுப் பிரிவினரைக் கொண்டு நிரப்பப்படும் என்றும் முதல்வர் (பொறுப்பு) தீபா தெரிவித்துள்ளார்.
முதல் கட்ட கலந்தாய்வு தமிழ், ஆங்கில இலக்கியம், மற்ற பாடங்கள் என மூன்று பிரிவுகளில் தினசரி மூன்று கட்டங்களாக நடைபெறுகின்றன. முதல் நாளில் தமிழ் இலக்கியத்துக்கு விண்ணப்பித்திருப்பவர்களில் 550 பேரும், ஆங்கில இலக்கியத்துக்கு 550 பேரும், மற்ற பாடங்களுக்கு 450 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த கலந்தாய்வு வரும் 18ஆம் தேதி வரை வேலைநாள்களில் தொடர்ந்து நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








