பிரதமர் மோடியைக் கொலை செய்யத் திட்டமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நபரை தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய கோவை மாநகரக் காவல் ஆணையர் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கோவை, குனியமுத்தூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தாமோதரன் அண்மையில் பணியில் இருபோது, அவரது செல்லிடப்பேசியின் கட்செவி அஞ்சல் எண்ணுக்கு ஒரு குரல் பதிவு வந்துள்ளது.
அதில், ரபீக் என்பவர் பிரகாஷ் என்பவரிடம் பேசும்போது, பிரதமர் மோடியைக் கொல்ல முடிவு செய்துள்ளோம். அத்வானி வந்தபோது கோவையில் குண்டு வைத்தது நாங்கள்தான் என பேசியிருந்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர் கோவை, கரும்புக் கடையைச் சேர்ந்த ரபீக் (50) என்பவரை ஏப்ரல் 23-ஆம் தேதி கைது செய்தனர்.
அவர் மீது இரு சமூகத்தினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், இவர் மீது மோசடி, ஏமாற்றுதல் உள்ளிட்ட வழக்குகள் ஏற்கெனவே நிலுவையில் உள்ளன.
இதனிடையே கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரபீக்குக்கு மே 7-ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ரபீக்கை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாநகரக் காவல் ஆணையர் கு.பெரியய்யா திங்கள்கிழமை உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகலை மருத்துவமனையில் உள்ள ரபீக்கிடம் மாநகரக் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை வழங்க உள்ளனர்.