பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ (அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், கோவை மாவட்டத்தல் அரசுப் பள்ளிகள், அலுவலகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
2003 ஏப்ரல் 1-ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், எல்.கே.ஜி. வகுப்புக்கு இடைநிலை ஆசிரியர்களை பாடம் நடத்தச் சொல்லும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்திருந்தது.
அதேநேரம் இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள், வடக்கு, தெற்கு வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், நிர்வாகிகள் செல்வராஜ், மைக்கேல்ராஜ், அருளானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் சுமார் 8 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும், விடுப்பு அளிக்கப்படாது என்ற தலைமைச் செயலரின் மிரட்டலுக்கு அரசு ஊழியர்கள் பயப்படவில்லை. முதல் நாள் போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் அடுத்தடுத்த நாள்களில் நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொள்வார்கள். முதல் நாளில் ஆர்ப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட்டோம். இனி வரும் நாள்களில் ஆர்ப்பாட்டத்திலும் மறியலிலும் ஈடுபட்டு கைதாக இருக்கிறோம். இனி வரும் நாள்களில் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்றார்.
அரசுப் பள்ளிகள் மூடல்
ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் போராட்டத்தின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. முன்னதாக சம்பந்தப்பட்ட தொடக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் திங்கள்கிழமை மாலை பள்ளிகளுக்குப் பூட்டுப் போட்டுவிட்டு சாவிகளை வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்படைத்துச் சென்றுவிட்டனர்.
அந்தப் பள்ளிகளில் பாடம் நடத்த ஆசிரியர்கள் யாரும் இல்லாத நிலையில் மாவட்டத்தில் 98 சதவீத தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாகவும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது தெரியாமல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாகவும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
அதேபோல் கோவை மாவட்டத்தில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் ஆசிரியர்கள் இல்லாமலேயே செயல்பட்டதாக கூறப்படுகிறது. தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்த நிலையில் மற்ற ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு கற்பித்தல் பணி முற்றிலும் முடங்கியது. இதே போன்ற நிலைதான் மாவட்டம் முழுவதிலும் நிலவியதாகவும், சில பள்ளிகளில் மட்டும் பெற்றோர், ஆசிரியர் சங்கம் மூலம் பணியமர்த்தப்பட்டிருந்த தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டும், சிறப்பாசிரியர்களைக் கொண்டும் வகுப்புகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அதேநேரம், வேலைக்கு சென்ற ஒரு சில ஆசிரியர்களையும் ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவினர் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதனால் அடுத்தடுத்த நாள்களில் போராட்டம் மேலும் தீவிரமடைந்து, அனைத்து பள்ளிகளிலும் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே கோவை மாவட்டத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களில் 70 சதவீதம் பேரும், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களில் 30 சதவீதம் பேருமே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக முதன்மைக் கல்வி அலுவலர் அய்யண்ணன் கூறியுள்ளார்.
அன்னூரில்...
அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய்த் துறை அலுவலகம் ஆகியவற்றில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை. இதேபோல் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 91 பள்ளிகளில் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. சில பள்ளிகளில் தனியார் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டன.
ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் வீராசாமி, ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சூலூரில்...
சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜாக்டோ ஜியோ சூலூர் ஒருங்கிணைப்பாளர் செ.விஜயலட்சுமி, சுவாமிநாதன் உள்ளிட்டோர் உரையாற்றினர். சூலூர் சுற்றுவட்டாரத்தில் பல பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
வால்பாறையில்...
வால்பாறை வட்டாரத்தில் மொத்தம் 140 ஆசிரியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பில் உள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் முன்பு ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அமைப்பை சார்ந்த கென்னடி, ரஞ்சித்குமார் உள்பட திரளானோர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையத்தில்...
மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ- ஜியோ அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, ஆசிரியர் மகேஷ்குமார் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன், செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் 500- க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் அருண் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி: முதல்வர் இரங்கல், நிதியுதவி அறிவிப்பு

ஐபிஎல் இறுதிப் போட்டி: திருவிழாவாக மாறிய குஜராத்!

அபிஷன் ஜீவிந்த்தின் புதிய பட புரோமோ!

இம்பாக்ட் வீரர் விதி நீக்கப்பட வேண்டும்: சச்சின் டெண்டுல்கர்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


