மா விவசாயத்தில் ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்டி பொள்ளாச்சி விவசாயி சாதனை படைத்து வருகிறார்.
பருவநிலை மாற்றம், வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயத்துக்குப் போதிய தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தைக் கைவிட்டு வருகின்றனர். பாரம்பரியமாக விவசாயம் செய்து வந்தவர்களின் வாரிசுகள் மாற்றுத்தொழில்களை செய்து வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் பெரிய குறையாக இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த செமணாம்பதியைச் சேர்ந்த விவசாயி வீரமணி, மா சாகுபடி செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார்.
செமணாம்பதியில் தனக்கு உள்ள சில ஏக்கர் நிலத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக மா சாகுபடி செய்து வருகிறார். பொள்ளாச்சி என்றாலே தென்னை சாகுபடிதான் நினைவுக்கு வரும். ஆனால் வீரமணி, தனது நிலத்தில் 35 ஆண்டுகளுக்கு முன்பு மா மரக் கன்றுகளை நடவு செய்து அதை தனது பிள்ளைகளைப்போல பராமரித்து வளர்த்தார்.
மா விவசாயத்தில் போதிய வருவாய் கிடைக்காது என பல விவசாயிகளும் கருதி, தென்னை விவசாயம் செய்துவரும் பகுதியில், அவர்களுக்கு மாற்றாக நம்பிக்கையுடன் மா மரக் கன்றுகளை நடவு செய்து, சொட்டு நீர் பாய்ச்சி வளர்த்தார். நடவு செய்த மூன்றரை ஆண்டுகளிலேயே மா மரக் கன்றுகள் ஓரளவு வளர்ந்து மகசூல் தரத் தொடங்கின. ஆரம்பத்தில் ஒரு மரத்தில் சில கிலோ அளவுக்குதான் மாம்பழங்கள் கிடைத்தன. ஆனால், துவண்டுவிடாமல் தனது மா மரங்களை நோய் தாக்குதல், வறட்சி போன்றவற்றில் இருந்து பாதுகாத்து வளர்த்து வந்தார்.
ஒவ்வோர் ஆண்டும் மாமரங்கள் தரும் மகசூலின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. 10 ஆண்டுகள் வயதைக் கடந்த பிறகு மாமரங்கள் ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் வருவாய் கொடுத்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் தற்போது ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது.
தென்னை மரங்களில் கிடைக்கும் வருவாயை விட மா மரத்தில் அதிக வருவாயை தற்போது ஈட்டிவருகிறார். தனது தோட்டத்தில் அல்போன்சா, பங்கனபள்ளி, செந்தூரா, இமாம்பசந்த், மல்லிகா போன்ற ரக மரங்களை வளர்த்து வருகிறார். ஒரு ஏக்கருக்கு 140 மா மரங்களை நடவு செய்துள்ளார். மேலும் பல விவசாயிகளுக்கு மா சாகுபடி வழிகாட்டுதலும் வழங்கி வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி முதல் மார்ச் வரை அறுவடை செய்கிறார்.
இதுகுறித்து விவசாயி வீரமணி கூறியது:
மாமரத்துக்கு முக்கியத்துவம் தந்து முறையாகப் பராமரித்து வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு பராமரிப்பைப் பொருத்து ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 75 ஆயிரத்துக்கும் மேல் உறுதியாக வருவாய் கிடைக்கும். மா விவசாயத்தில் அனுபவம் பெற்றுவிட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரையும் வருவாய் ஈட்டும் வாய்ப்புள்ளது.
அல்போன்சா உள்ளிட்ட சில ரக மாம்பழங்கள் ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. அல்போன்சா மாம்பழம் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைத்தால் கிலோ ரூ.50 முதல் 300 வரை விற்பனை செய்ய முடியும்.
பங்கனபள்ளி கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யமுடியும். செந்தூரா கிலோ ரூ. 90 வரை விற்பனை செய்ய முடியும். இந்த விலைகள் நாம் தேர்வு செய்யும் வியாபாரிகள், ஏற்றுமதி வாய்ப்பு போன்றவற்றைப் பொருத்து மாறுபடும். மாமரத்தின் கன்றை நடவு செய்துவிட்டு தண்ணீர் பாய்ச்சாமல், பராமரிக்காமல் விட்டால் மகசூல் கிடைக்கும் காலமும் தாமதம் ஆகும். விளைச்சல் குறைந்து, வருவாயும் குறையும்.
அதேபோல ஏற்றுமதி வாய்ப்புள்ள ரகங்களையும், சந்தையில் நன்கு விற்பனையாகும் ரகங்களையும் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். இதை விவசாயிகள் முறையாக கடைப்பிடித்தால் மா விவசாயம் என்பது சிறந்த லாபம் தரும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

