மொழி மீது உண்மையான பற்று வேண்டும்: நாஞ்சில் நாடன் வேண்டுகோள்

மொழி மீது உண்மையான பற்று வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். 

மொழி மீது உண்மையான பற்று வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசினார். 
உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு, கோவை விஜயா பதிப்பகத்தின் சார்பில்,  விஜயா வாசகர் வட்ட விருதுகள் வழங்கும் விழா கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் தலைமை வகித்தார். விஜயா பதிப்பகத்தின்  நிறுவனர் மு.வேலாயுதம் வரவேற்றார். 
விழாவில், எழுத்தாளர் ஜெயகாந்தன் விருது, எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்துக்கும்,  கவிஞர் மீரா விருது, கவிஞர் அம்சப்பிரியாவுக்கும், புதுமைப்பித்தன் விருது, எழுத்தாளர் கே.என்.செந்திலுக்கும், சக்தி வை.கோவிந்தன் விருது, தொட்டியம் அரசு நூலகர் வே.செல்வமணிக்கும், வானதி விருது மதுரை ஜெயம் புத்தக நிலையத்தின் உரிமையாளர் ஆர். ராஜ் ஆனந்துக்கும் வழங்கப்பட்டன.
முன்னதாக,  விருதாளர்களை அறிமுகப்படுத்தி எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேசியதாவது: 
தற்காலத்தில் புத்தக விற்பனை கவலைப்படும் நிலையில் உள்ளது. வெளிநாடுகளில் வணிக வளாகம், விமான நிலையங்களில் காத்திருப்போர் கூட புத்தகங்கள் வாசிப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டில் ரயிலில் பயணிக்கும் அனைவரின் கைகளிலும் செல்லிடப்பேசி இருப்பதையே பார்க்க முடிகிறது. 
நூலகத்துக்கு செல்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதும் வருத்தமளிக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தைப் பெற்றோர்கள் கற்றுத் தர வேண்டும். சமூகத்தின் மனசாட்சியாக எழுத்தாளன் உள்ளான். அநீதிகளுக்கு எதிராக அவனது எழுத்துகள் தைரியமாக எழுந்து நின்று போராடுவதற்கு விருது வழங்குவது பாராட்டுக்கு உரியது. திரைப்படங்களில் ஓரிரு காட்சியில் நடித்து செல்லும் நடிகரைக் கூட அறிந்திருக்கும் சமூகத்தில், எழுத்தாளனை யாருக்கும் அடையாளம் தெரிவதில்லை. மொழிக்கு ஏதாவது செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. மொழி மீது உண்மையான பாசம், பற்று வேண்டும். கைமாறு செய்வதற்கான செயல் வடிவம் நம்மிடம் வேண்டும். அந்த வகையில் எழுத்தாளனைக் கொண்டாடுங்கள். கொண்டாடுபவர்களை ஊக்குவியுங்கள் என்றார். விழாவில் விருது பெற்ற பா.செயப்பிரகாசத்துக்கு ரூ. 1 லட்சம் ரொக்கம், கவிஞர் அம்சப்பிரியா, எழுத்தாளர் கே.என்.செந்தில் ஆகியோருக்கு ரூ. 25 ஆயிரம், நூலகர் வே.செல்வமணி, புத்தக நிலைய உரிமையாளர் ஆர். ராஜ் ஆனந்த் ஆகியோருக்கு ரூ. 15 ஆயிரம் ரொக்கம் மற்றும்  பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா, பூ.சா.கோ. கலை, அறிவியல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் ராமராஜன், பேராசிரியர் கரசூர் கந்தசாமி ஆகியோர் விருதாளர்களைப் பாராட்டிப் பேசினர். இதைத் தொடர்ந்து விருதாளர்கள் ஏற்புரை ஆற்றினர். முனைவர் உஷாராணி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com