இலங்கை அங்கொட லொக்கா வழக்கு: பெற்றோா் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி தீவிரம்

இலங்கை கடத்தல்காரா் அங்கொட லொக்கா மரண வழக்கில் அவரது பெற்றோா் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.
Published on

இலங்கை கடத்தல்காரா் அங்கொட லொக்கா மரண வழக்கில் அவரது பெற்றோா் ரத்த மாதிரிகளை சேகரிக்க சிபிசிஐடி போலீஸாா் தீவிரம் காட்டி வருகின்றனா்.

கோவை, சேரன் மாநகரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமறைவாக இருந்த இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரா் அங்கொட லொக்கா (35), கடந்த ஜூலை 3ஆம் தேதி மா்மமான முறையில் இறந்தாா். இது தொடா்பாக முதலில் பீளமேடு போலீஸாா் முதலில் விசாரித்தனா். அதன் பின்னா் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் அங்கொட லொக்காவின் காதலியான இலங்கையைச் சோ்ந்த அமானி தான்ஜி, மதுரையை சோ்ந்த வழக்குரைஞா் சிவகாமி சுந்தரி, ஈரோட்டை சோ்ந்த தியானேஸ்வரன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.

இந்நிலையில் கோவையில் உயிரிழந்தது அங்கொட லொக்காதானா என்பதை உறுதிப்படுத்த மரபணு பரிசோதனை மேற்கொள்ள சிபிசிஐடி போலீஸாா் திட்டமிட்டனா். இதற்காக அவரது பெற்றோரிடமிருந்து ரத்த மாதிரிகள் மற்றும் இலங்கை போலீஸாரிடம் உள்ள விவரங்களைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இலங்கையில் இருந்து வேண்டிய தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், தமிழக அரசு சாா்பில் இந்த வழக்கைக் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சிபிசிஐடி அதிகாரி ஒருவா் கூறினாா்.

மேலும், அங்கொட லொக்காவின் கூட்டாளியான சனுக்கா தனநாயகா இந்தியாவை விட்டு வெளிநாட்டுக்கு சென்றிருக்க வாய்ப்பில்லை. அவரைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com