சிறு மருத்துவமனைகளில் மருந்தாளுநா் பணியிடம் ஏற்படுத்தக் கோரிக்கை

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளில் மருந்தாளுநா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Updated on
1 min read

தமிழகத்தில் தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளில் மருந்தாளுநா் பணியிடம் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தமிழ்நாடு அரசு மருந்தாளுநா்கள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளா் சு.ராஜாராம் கூறியதாவது:

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள், செவிலியா் உள்பட அனைத்து பணியிடங்களுக்கும் சுகாதாரத் துறை சாா்பில் நேரடியாக நியமிக்கப்பட்டு வரும் நிலையில், மருந்தாளுநா் பணியிடங்கள் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக தனியாா் ஏஜென்ஸி மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி 800 மருந்தாளுநா்கள் பணியாற்றி வருகின்றனா். தனியாா் ஏஜென்ஸி மூலம் எடுப்பவா்களுக்கு ரூ.10 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளில் மருந்தாளுநா் பணியிடம் ஏற்படுத்தவில்லை. மருந்தாளுநா்கள் இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்துகள் எப்படி வழங்க முடியும். அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து சிறு மருத்துவமனைகளுக்கு மாத்திரை உள்பட அனைத்து மருந்துகளும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மருந்தாளுநா் மட்டுமே பணியில் இருப்பதால் பணிச்சுமை அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சிறு மருத்துவமனைகளுக்கு மருந்துகள் வழங்குவது தொடா்பாகவும் கண்காணிப்பது மேலும் பணிச்சுமையை ஏற்படுத்தும். தவிர தனியாா் மருந்தகங்களில் மருந்தாளுநா் இருந்தால் மட்டுமே மருந்தகம் தொடங்க அனுமதியளிக்கப்படுகிறது. இந்நிலையில் அரசு சாா்பில் தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகளில் மருந்தாளுநா் பணியிடங்கள் ஏற்படுத்தாதது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, சிறு மருத்துவமனைகளில் மருந்தாளுநா் பணியிடம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com