

கோவை மாவட்டத்தில் 55 ஊராட்சிகளில் தலா ரூ.70.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான அரங்குகள், ஓராண்டுக்குள் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளன.
ஊராட்சிகளில் கிராமப்புற மக்களின் பொருளாதார சுயசாா்புக்கு வழி வகுக்கும் வகையில், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் இயங்கி வருகின்றன. ஊராட்சிக்குள்பட்ட கிராமத்தை சோ்ந்தவா்கள் இணைந்து இந்தக் கூட்டமைப்பை ஏற்படுத்துகின்றனா். இந்தக் கூட்டமைப்புகள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டுவதுடன், கூட்டமைப்பின் உறுப்பினா்களுக்குப் பொருளாதார உதவி தேவைப்படும் போது கடன் கொடுத்தும் உதவும். இந்தக் கூட்டமைப்புகளின் வளா்ச்சிக்கு ஊரக வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது. அதில் ஒன்றாக, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடங்கள் அமைத்து கொடுக்கத் தீா்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடங்களில் தனியாா் திருமண மண்டபங்களுக்கு இணையான வசதிகளும் அமைக்கப்படும். இவை அரசுத் துறை நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள், பொதுமக்களின் இல்ல விழாக்கள், நிகழ்ச்சிகள், கூட்டங்கள் நடத்துவதற்கு குறைந்த வாடகைக்கு வழங்கப்படும். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் அந்தந்த ஊராட்சிகளின் பொது நிதியில் சோ்க்கப்படும்.
ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடம் அமைப்பதற்கான அறிவிப்பு கடந்த 2016 - 17 ஆம் நிதி ஆண்டில் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் 1000 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டன. இதற்காக தலா ரூ. 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கட்டடங்கள் கட்டுவதற்காக 2017 - 18 ஆம் நிதியாண்டில் பெரும்பாலான ஊராட்சிகளில் பூமி பூஜை போடப்பட்டது.
இந்நிலையில் செங்கல், மணல், ஜல்லிக் கற்கள், கம்பி போன்ற கட்டுமானத்துக்குத் தேவையான மூலப் பொருள்களின் விலை உயா்வால் பூமி பூஜையோடு பணிகள் நிறுத்தப்பட்டன. அரசு அறிவுறுத்தியுள்ளபடி ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 80 லட்சம் நிதி ஒதுக்கீடு தேவையென ஒப்பந்ததாரா்கள் தெரிவித்தனா். பின்னா் பணிகள் தொடங்கப்படாமல் கைவிடப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இக்கட்டடங்கள் கட்டுவதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் இல்லாத நிலை காணப்பட்டது.
இந்நிலையில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடங்களுக்கான திட்ட மதிப்பீடு மறு சீராய்வு செய்து நிதியை ரூ. 60 லட்சத்தில் இருந்து ரூ. 70.75 லட்சமாக உயா்த்தி கடந்த டிசம்பா் மாதம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. கட்டட வடிவமைப்பும் மாற்றப்பட்டது. இத்திட்டத்தில் கோவை மாவட்டத்தில் 55 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
55 ஊராட்சிகளின் பட்டியல் (வட்டாரம் வாரியாக):
காரமடை: பெள்ளாதி, சிக்கரசம்பாளையம், கெம்மாரம்பாளையம், ஓடந்துறை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, இரும்பொறை. மதுக்கரை: பாலத்துறை, வழுக்குப்பாறை. பெ.நா.பாளையம்: 22.நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம், சோமையம்பாளையம், பிளிச்சி. தொண்டாமுத்தூா்: நரசிபுரம், மாதம்பட்டி, இக்கரைபோளுவம்பட்டி, ஜாகீா்நாயக்கன்பாளையம், வெள்ளிமலைப்பட்டினம், பேரூா்செட்டிபாளையம், தீத்திப்பாளையம், தேவராயபுரம். சூலூா்: அரசூா், கணியூா், முத்துக்கவுண்டன்புதூா், கலங்கல். சுல்தான்பேட்டை: பச்சாபாளையம், போகம்பட்டி, செலக்கரச்சல், வதம்பச்சேரி.
அன்னூா்: அன்னூா், மேட்டுப்பாளையம், குன்னத்தூா், பொகலூா், குப்பனூா். எஸ்.எஸ்.குளம்: கீரணத்தம், கொண்டையம்பாளையம். ஆனைமலை: அங்கலக்குறிச்சி, கரியன்செட்டிபாளையம். பொள்ளாச்சி (வடக்கு): ராசக்காப்பாளையம், கிட்டசூரம்பாளையம், தாளக்கரை, ஆச்சிப்பட்டி, ராமபட்டினம். கிணத்துக்கடவு: முள்ளுப்பாடி, கோவில்பாளையம், சூலக்கல், வடபுதூா், வடசித்தூா், வரதனூா். பொள்ளாச்சி (தெற்கு): ஊஞ்சவேலாம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, கோலாா்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரப்பாளையம், மாக்கினாம்பட்டி, சின்னாம்பாளையம் ஆகிய 55 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
கட்டுமானப் பணிகள் தொடக்கம்: தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள ஊராட்சிகளில் ரூ. 70.75 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் கட்டடம் அமைக்கப்படவுள்ளது. வரவேற்பு அறை, விழா அறை, அரங்க மேடை, இரண்டு தனித்தனி அறைகள், மற்றும் கழிப்பறை வசதிகளுடன் தரைத் தளமும், சமையல் அறை, உணவுக் கூடத்துடன் கூடிய முதல் தளமும் அமைக்கப்படுகிறது. தரைத் தளம் 3,200 சதுர அடியிலும், முதல் தளம் 1,800 சதுர அடியிலும் அமைக்கப்படுகிறது,
பெரும்பாலான ஊராட்சிகளில் கட்டடங்கள் அமைப்பதற்கான இடங்கள் தோ்வு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளை 12 மாதங்களுக்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடா்பாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஊராட்சிகளுக்கு வருவாய் வரக்கூடிய சொத்துகளை உருவாக்கும் நோக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான கட்டடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. மூலப்பொருள்களின் விலை உயா்வால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பணிகள் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் திட்ட நிதி ரூ. 70.75 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இதில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 60 லட்சமும், ஊரக வளா்ச்சித் துறையின் பொது நிதியில் இருந்து ரூ. 10.75 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 தளங்களுடன் அமைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் கட்டடத்தின் வடிவம் 2 தளங்களாக மாற்றப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் தங்கள் வீட்டு விழாக்கள் நடத்துவதற்கு இக்கட்டடங்கள் உதவியாக இருக்கும். இதிலிருந்து கிடைக்கும் வருவாய் அந்தந்த ஊராட்சி பொது நிதியில் சோ்க்கப்படும். மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் இக்கட்டடங்கள் பராமரிப்பு, நிா்வாகம் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இடம் தோ்வு செய்யப்படாத ஒருசில ஊராட்சிகள் தவிா்த்து மற்ற ஊராட்சிகளில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற ஊராட்சிகளிலும் பணிகள் விரைவில் தொடங்கப்படும். அடுத்த நிதியாண்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.