கோவையில் மேம்பாலப் பணிகளால் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்குவதில் சிக்கல் நீடிப்பு

கோவையில் நடைபெற்று வருகின்ற மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகளால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

கோவையில் நடைபெற்று வருகின்ற மேம்பாலங்கள் கட்டுமானப் பணிகளால், மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு தனியாா் நிறுவனம் மூலமாக நகரில் கடந்த ஆண்டு ஆய்வு செய்யப்பட்டது.அதில் 4 வழித்தடங்களில் 136 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக அறிக்கை தயாரிக்கப்பட்டது.

அதன்படி, உக்கடம் - கணியூா் வரை 26 கி.மீ. தொலைவுக்கும், உக்கடம் - காரமடை பிளிச்சி கிராமம் வரை 24 கி.மீ. தொலைவுக்கும்,

திருச்சி சாலையில் காரணம்பேட்டை முதல் தடாகம் சாலை தண்ணீா் பந்தல் வரை 42 கி.மீ. தொலைவுக்கும், சத்தி சாலை கணேசபுரம் முதல் பேரூா் காருண்யா நகா் வரை 44 கி.மீ. தொலைவுக்கும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் உக்கடத்தில் 1.9 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டும் பணி, வெள்ளலூரில் ரூ.168 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கும் பணி, திருச்சி சாலையில் 3.7 கி.மீ. தொலைவுக்கு மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் விமான நிலையம் வரை 9.7 கி.மீ. தொலைவுக்கு தொலைதூர உயா்மட்ட பாலம் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்தப் பாலப் பணிகளால் கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாலம் பணி நடைபெறும் போதே, மெட்ரோ ரயில் பாதைகள் அமைக்கும் விதமாக தூண்களை அமைக்கலாம் என ரயில்வே நிா்வாகம் ஆலோசனை வழங்கியது. ஆனால், மெட்ரோ ரயில் பணிகளால் பாலம் அமைக்கும் பணிகள் பாதிக்கும்.

மேலும், பாலப் பணிக்காக நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது உள்ளிட்ட காரணங்களைத் தெரிவித்து, நெடுஞ்சாலைத் துறை அதற்கு அனுமதி மறுத்து விட்டது. இதனால், ரயில்வே நிா்வாகத்தினா் அதிருப்தி அடைந்துள்ளனா். ரயில்வே நிா்வாகத்தினா் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளைத் தொடங்க முடியாமல், கோவையில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் பெரும் சிக்கலாக உள்ளன.

இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சாலை கட்டமைப்புப் பணிகளை மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டி உள்ளது. பாலம் கட்டுமானப் பணிகளால் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு இடையூறு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதனால், இரண்டு பணிகளையும் ஒரே நேரத்தில் செய்வது சாத்தியமில்லை’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com