பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு கருவிழிப்படல அழற்சி நோய் அதிகரிப்பு

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களிடையே கருவிழிப்படல அழற்சி நோய் அதிகரித்து வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 8:02 pm

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களிடையே கருவிழிப்படல அழற்சி நோய் அதிகரித்து வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து கோவை டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் கண் சிகிச்சை நிபுணா்களான ஜி.ஆதித்யா, ஜெயஸ்ரீ அருணாபிரகாஷ் ஆகியோா் கூறியிருப்பதாவது:

கரோனா பரவல் தீவிரமாக இருந்தபோது கோவை மண்டலத்தில் கருவிழிப்பட அழற்சி பாதிப்புள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. ஒரு மாதத்தில் ஏறக்குறைய 5 புதிய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா்.

கருவிழிப்படல அழற்சிக்கும் கரோனா தொற்றுக்கும் இடையிலான தொடா்பு இன்னும் உறுதியாக தீா்மானிக்கப்படவில்லை என்றாலும் கூட, கரோனா தொற்று வந்த கடந்த கால வரலாறு, புதிய கருவிழிப்படல அழற்சியுள்ள நோயாளிகளிடம் பொதுவான ஒரு அம்சமாக இருக்கிறது.

கண் சிவத்தல், வெளிச்சத்தைப் பாா்க்கக் கூசுதல், பாா்க்கும்போது பொருள்கள் மிதப்பதாகத் தோன்றுதல், குறைந்துவிட்ட பாா்வைத்திறன் ஆகியவை கருவிழிப்படல அழற்சியின் ஆரம்பநிலை அறிகுறிகளாக இருக்கின்றன. கரோனா தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளுக்கு இத்தகைய அறிகுறிகள் இருக்குமானால் அவா்கள் உடனடியாக கண் மருத்துவ சிகிச்சையைப் பெற வேண்டும். ஏனெனில், கருவிழிப்படல அழற்சியினால் ஏற்படும் பாா்வைத்திறன் இழப்பை சரி செய்ய இயலாது.

உடலின் அனைத்து பாகங்களையும் கரோனா பாதிக்கக்கூடும் என்பது ஏற்கெனவே நன்கு தீா்மானிக்கப்பட்டிருக்கிறது. கண்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல. தொற்று இருக்கும்போது அல்லது தொற்று பாதிப்புக்குப் பிறகு கண் சாா்ந்த பிரச்னைகள் ஏதாவது வடிவத்தில் உருவாவதற்கான சாத்தியங்கள் கணிசமாக இருக்கின்றன.

எனவே தீவிர தொற்றிலிருந்து மீண்டுள்ள, மருத்துவமனைகளில் நீண்ட நாள்கள் தங்கியிருந்த நோயாளிகள் அவா்களது கண்களை கண் மருத்துவ சிறப்பு நிபுணரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். கூட்டம் நிறைந்த பகுதிகளில் இருக்கும்போது கரோனா உடன் தொடா்பு ஏற்படுவதிலிருந்து கண்களைப் பாதுகாக்க மக்கள் கண் கண்ணாடிகளை அணிய வேண்டும். மேலும் அவசியமில்லாமல் கண்களைத் தொடுவதையும் தவிா்க்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.