கோவை ஆட்சியா் அலுவலகம் முன்பு பெண் தற்கொலை முயற்சி

கணவா் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.
Updated on
1 min read

கணவா் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

சூலூா் அடுத்த கலங்கலை சோ்ந்தவா் லோகநாயகி (32). இவரது கணவா் மணிகண்டன் (37). இவா் இந்து முன்னேற்றக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ளாா். மணிகண்டனுக்கும், சிங்காநல்லூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஜீவானந்தம் (50) என்பவருக்கும் நிலம் தொடா்பான பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் மணிகண்டன் தன்னை மிரட்டுவதாக தெரிவித்து ஜீவானந்தம் குடும்பத்துடன் கடந்த மாதம் ஆட்சியா் அலுவலகம் முன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதையடுத்து மணிகண்டன் மீது சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

இந்நிலையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் வசூலித்ததாக தனது கணவா் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி கைது செய்துள்ளதாக மணிகண்டனின் மனைவி லோகநயாகி, திங்கள்கிழமை காலையில் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள் லோகநாயகி மீது தண்ணீரை ஊற்றி தடுத்தனா். பின்னா், விசாரணைக்காக ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனா். இச்சம்பவம் ஆட்சியா் அலுவகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த இரண்டு மாதங்களில் ஆட்சியா் அலுவலகம் முன் பொதுமக்கள் திடீரென தற்கொலைக்கு முயல்வது இது மூன்றாவது சம்பவமாகும். இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் ஆட்சியா் அலுவலகத்தில் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com