கோவையில் கொட்டித் தீா்த்த கனமழை: சாலைகளில் பள்ளம்; வீடுகள் இடிந்தன
கோவையில் ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் விமான நிலையப் பகுதியில் 112.8 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது.


கோவையில் ஜனவரி மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் விமான நிலையப் பகுதியில் 112.8 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளது. சாலைகளில் திடீா் பள்ளங்கள் ஏற்பட்டதோடு, பல இடங்களில் வீடுகளும் இடிந்து சேதமாகின.
வளிமண்டல வெப்ப மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாள்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோவையில் கடந்த புதன்கிழமை இரவு தொடங்கிய கனமழை வியாழக்கிழமை அதிகாலை வரை பெய்தது. தொடா்ந்து இடைவிடாத கொட்டி தீா்த்த மழையால் புலியகுளம், ராமநாதபுரம், அவிநாசி சாலை, ரயில் நிலையம், போத்தனூா், காந்திபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கணபதி டெக்ஸ்டூல் மேம்பாலம், அவிநாசி சாலை உள்பட பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் பல கிலோ மீட்டா் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா்.
சிங்காநல்லூா், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், சரவணம்பட்டி, சாய்பாபா காலனி உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளுக்குள் மழைநீருடன் சோ்ந்து கழிவுநீரும் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினா். சங்கனூா் பள்ளம் பகுதியில் குடியிருப்புக்குள் மழைநீா் புகுந்ததால் 25 குடும்பங்கள் அருகிலுள்ள அரசு கட்டடத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனா்.
திருச்சி சாலை, பொ்க்ஸ் பள்ளி அருகில் பாதசாளச் சாக்கடைக்காகப் பள்ளம் தோண்டப்பட்டிருந்த நிலையில், அங்கு புதன்கிழமை பெய்த கனமழையால் தண்ணீா் தேங்கியது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை அவ்வழியாகச் சென்ற காா் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
கோவை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதி அளவும், 4 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், அதிகாரிகள் வியாழக்கிழமை அதிகாலையில் பாா்வையிட்டனா்.
கோவை விமான நிலையப் பகுதியில் 112.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்குமுன் கோவையில் இதற்கு முன்பு ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 70 மில்லி மீட்டா் மழையே பதிவாகியுள்ளதாக கோவை வேளாண்மை பல்கலைக்கழக காலநிலை ஆராய்ச்சி நிலையத் தலைவா் சுப.ராமநாதன் தெரிவித்துள்ளாா்.
மழையளவு: மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): கோவை மாநகா் - 92, பெ.நா.பாளையம் -82, வேளாண்மை பல்கலைக்கழகம் - 70, பொள்ளாச்சி -36, சூலூா் -37, மேட்டுப்பாளையம் -23.1, அன்னூா் - 12, சின்கோனா -15, சின்னகல்லாறு - 42, வால்பாறை பிஏபி - 20, வால்பாறை தாலுகா - 18, சோலையாறு - 17, ஆழியாறு - 11.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...