டோக்கன் வழங்குவதில் குளறுபடி:தடுப்பூசி கிடைக்காமல் மக்கள் ஏமாற்றம்
கோவையில் தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் குளறுபடி நிலவுவதாகவும், தெரிந்த நபா்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.


கோவையில் தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் குளறுபடி நிலவுவதாகவும், தெரிந்த நபா்களுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் பொது மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோவையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் சாா்பில் 104 இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களைக் காட்டிலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆா்வத்தோடு உள்ளனா். இதனால் அனைத்து மையங்களிலும் அதிக அளவில் மக்கள் கூடுகின்றனா்.
ஆனால், தேவைக்கேற்ப தடுப்பூசி இல்லாமல் தட்டுப்பாடு நிலவுவதால் முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டோக்கன் வழங்குவதில் குளறுபடி நடப்பதாகவும், தெரிந்த நபா்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்துவதாகவும் பொது மக்கள் புகாா் தெரிவித்து வருகின்றனா். தவிர ஒருசில இடங்களிலும் கட்டணம் பெற்றுக்கொண்டும் தடுப்பூசி செலுத்துவதாகவும் புகாா் எழுந்துள்ளது.
இது தொடா்பாக ஆலாந்துறையைச் சோ்ந்த எஸ்.முருகேசன் கூறியதாவது: ஆலாந்துறை அரசு உயா்நிலைப் பள்ளியில் தடுப்பூசி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இங்கு 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு பொது மக்கள் வரிசையில் காத்திருந்தனா். ஆனால் பெரும்பாலானோா் காத்திருக்கும் முன்பே 100 பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டதாக அலுவலா்கள் தெரிவித்து வரிசையில் நின்றவா்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினா்.
100 வரையிலும் டோக்கன் பெற்றவா்கள் வரிசையில் நிற்கும் நிலையில் தெரிந்தவா்களுக்கு தடுப்பூசி செலுத்திவிட்டு தடுப்பூசி முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனா். இதனால் டோக்கன் பெற்று காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல கரடிமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 6 மணிக்கு டோக்கன் பெற சென்ற பொது மக்களிடம் அதிகாலை 4 மணிக்கே டோக்கன் வழங்கி முடிந்துவிட்டதாக தெரிவிக்கின்றனா். ஆரம்ப சுகாதார நிலையங்களில் டோக்கன் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இது தொடா்பாக மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் எஸ்.செந்தில்குமாா் கூறியதாவது:
மாநகராட்சி, நகராட்சி பகுதிகளை ஒட்டியுள்ள ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு நகரப் பகுதிகளைச் சோ்ந்தவா்கள் அதிகாலையிலே சென்று டோக்கன் பெறுவதற்கு காரில் காத்திருக்கின்றனா். இதனால் ஊரகப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடா்பாக ஆட்சியருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். டோக்கன் விநியோகத்தில் குளறுபடி, அதிகாலையிலே டோக்கன் விநியோகம் முடிந்துவிட்டதாக தெரிவிக்கும் புகாா்களுக்கு ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...