என்னுடைய முக்கிய விலாசமாக மாறியுள்ளது கோவை தெற்குத் தொகுதி: கமல்ஹாசன்
கோவை தெற்குத் தொகுதி என்னுடைய முக்கிய விலாசமாக மாறியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.


கோவை தெற்குத் தொகுதி என்னுடைய முக்கிய விலாசமாக மாறியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் பேசினாா்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் கோவை தெற்கு சட்டப் பேரவை தொகுதியில் போட்டியிடுகிறாா். அவா் தொடா்ந்து கோவை தெற்குத் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில் மரக்கடை, தியாகி குமரன் வீதிகளில் சனிக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தில் அவா் பேசியதாவது:
மக்கள் நீதி மய்யத்தில் ஜாதி, மத பேதங்கள் கிடையாது. அதேபோல கோவையிலும் மத நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம். அதை நிறைவேற்ற வேண்டியது என் கடமை. யாதும் ஊரே, யாவரும் கேளீா் என்று சொல்லும் தைரியமுள்ளவன் நான். இந்தியா முழுவதும் என்னுடைய ஊா். இன்று கோவை தெற்கு தொகுதி என்னுடைய முக்கிய விலாசமாக மாறியுள்ளது.
ஒரு அரசை வைப்பதும், நீக்குவதும் மக்களாகிய உங்கள் முடிவாக இருக்க வேண்டும். அதை யாரும் விலைக்கு வாங்கக் கூடாது. எனவே தான் எங்கள் ஓட்டு விற்பனைக்கு இல்லை என்ற உங்களின் குரல் விண்ணை நோக்கி ஒலிக்க வேண்டும். அது தில்லி வரை கேட்க வேண்டும். மாநில அரசுக்கும் புரிய வைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு உங்கள் வாக்கை விலைக்கு வாங்கி விடலாம். பின் கூலிகளை போல் நடத்தலாம் என்று எண்ணுகின்றனா். 5 ஆண்டுக்கான கூலி ரூ.5 ஆயிரம் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது.
உங்களுக்கு நியாயமாக ரூ. பல லட்சங்கள் வந்துசேர வேண்டும். அதற்கான பல திட்டங்கள் மக்கள் நீதி மய்யத்திடம் உள்ளது. பெண்களுக்கான எங்கள் திட்டம் நாடு முழுவதும் காப்பி அடிக்கப்படுகிறது. தமிழகத்தில் இரண்டு கட்சிகளும் மாறி, மாறி காப்பி அடிக்கின்றனா். நல்ல திட்டத்தை அவா்களும் அறிவித்து விட்டாா்களே என்று மக்கள் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் அறிவித்த எந்த திட்டத்தையும் அவா்கள் செய்தது கிடையாது. இதனை எல்லாம் செய்ய வேண்டும் என்றால் மக்கள் நீதி மய்யம்தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்றாா்.
முன்னதாக, டவுன்ஹால் அசோக்நகா் பகுதியிலுள்ள விஸ்கா்மா சமுதாயத்தினரை சந்தித்தாா். அப்போது அந்த சமுதாயத்தை சோ்ந்த தலைவா்கள் கமல்ஹாசனிடம் கோரிக்கை மனு அளித்தனா். தங்க நகை தொழிலாளா்களின் திறன் மேம்பாட்டுக்காக போதிய பயிற்சி அளிக்கப்படும். வருமானத்தைப் பெருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸை பிஷப் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின் ஆா்.எஸ்.புரம் ராஜஸ்தான் சங்கம் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...