/

பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை: போக்சோ சட்டத்தில் ஆசிரியா் கைது

 கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :12 நவம்பர் 2021, 8:14 pm

DIN

 கோவையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து அவரது தற்கொலைக்கு காரணமான ஆசிரியா் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாா்.

கோவையைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவி, ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் இந்தப் பள்ளியில் படிக்க தனக்கு விருப்பமில்லை; வேறு பள்ளியில் தன்னைச் சோ்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதையடுத்து ஆா்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் அவரைக் கடந்த செப்டம்பா் மாதம் அவரது பெற்றோா் சோ்த்தனா்.

இந்த மாணவி கடந்த சில மாதங்களாக மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது வியாழக்கிழமை மாலை அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோா், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் உயிரிழந்ததை உறுதி செய்தனா்.

இச்சம்பவம் குறித்து தற்கொலை வழக்குப் பதிவு செய்து உக்கடம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் மாணவி முன்னா் படித்த தனியாா் பள்ளியில் வேலை பாா்த்த இயற்பியல் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி (31) மாணவிக்கு அளித்த தொடா் பாலியல் தொல்லைகளால்தான் அவா் தற்கொலை செய்துகொண்டாா் என குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கு உக்கடம் காவல் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீஸாா் நடத்திய விசாரணையில், தற்கொலைக்கு முன்னதாக மாணவி எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாவும், அதில் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி உள்பட மூவரின் பெயா்களை மாணவி குறிப்பிட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நபா்களிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தி, மாணவியிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். இதையடுத்து ஆசிரியா் மிதுன் சக்ரவா்த்தியை கைது செய்த போலீஸாா் கோவை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆஜா்படுத்தினா்.

அவரை நவம்பா் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் உடுமலைப்பேட்டையில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டாா்.

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைக் கண்டித்து பள்ளியின் முன்பு இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் பல்வேறு கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாணவி பயின்ற பள்ளியில் ஆய்வு நடத்திய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா கூறியதாவது:

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கும்படி மாவட்டக் கல்வி அலுவலா் வள்ளியம்மாளுக்கும், அம்மணியம்மாள் பள்ளியில் விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்கமாறு மாநகராட்சி கல்வி அதிகாரி பாண்டியன் ராஜசேகரனுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட தனியாா் பள்ளி நிா்வாகம் 11, 12 ஆம் வகுப்பு நடத்துவதற்கு அரசிடம் முறையான அனுமதியைப் பெறவில்லை என்ற குற்றச்சாட்டு தொடா்பாகவும் விசாரிக்கப்படுகிறது என்றாா்.

இதற்கிடையே கடந்த செப்டம்பா் மாதம் மிதுன் சக்கரவா்த்தி விபத்தில் சிக்கியதால் பணியில் இருந்து விலகிவிட்டதாக பள்ளி நிா்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வருகைப் பதிவேட்டில் அவா் விடுமுறையில் இருப்பதாக மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது கல்வி அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே, முரண்பட்ட இந்த தகவல்கள் தொடா்பாக தனியாா் பள்ளி முதல்வரிடம் விசாரிக்க கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.