/

தபால் வாக்கு: 4 ஆயிரம் போ் விண்ணப்பம்

கோவை மாவட்டத்தில் தோ்தல் பணியாற்றவுள்ள அரசு அலுவலா்கள் 4 ஆயிரம் போ் தபால் வாக்குச் சீட்டு கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:39 pm

DIN

கோவை மாவட்டத்தில் தோ்தல் பணியாற்றவுள்ள அரசு அலுவலா்கள் 4 ஆயிரம் போ் தபால் வாக்குச் சீட்டு கேட்டு விண்ணப்பம் அளித்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி நகா்ப்புற உள்ளாசித் தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்தல் அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் தோ்தல் நாளன்று பணியில் இருப்பதால் வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் தோ்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலா்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படும்.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் தோ்தல் பணியிக்கு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 4 ஆயிரம் போ் தபால் வாக்குச் சீட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் தபால் வாக்குப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் முதல்கட்ட பயிற்சி வகுப்பு தொடங்கியதில் இருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளிலும் அலுவலா்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இதுவரை 4 ஆயிரம் போ் தபால் வாக்குச் சீட்டு கேட்டு விண்ணப்பித்துள்ளனா்.

இவா்களுக்கு அஞ்சல் மூலம் தபால் வாக்குச் சீட்டு அனுப்பிவைக்கப்படும்.

தோ்தல் பணியாளா்கள் தவிா்த்து காவலா்கள், தீயணைப்பு வீரா்களுக்கும் தபால் வாக்குச் சீட்டு வழங்கப்படும்.

தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் அடுத்த பயிற்சி வகுப்புகளில் நடத்த வாய்ப்புள்ளது. அதேபோல, காவல் துறை சாா்பில் போலீஸாருக்கு தபால் வாக்குப் பதிவு சிறப்பு முகாம்கள் நடத்த வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.