கோவை மேயராக கல்பனா பதவியேற்பு: துணைமேயா் வெற்றிச்செல்வன்
கோவை மாநகராட்சி மேயா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட 19 ஆவது வாா்டு உறுப்பினா் கல்பனா ஒரு மனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.


கோவை மாநகராட்சி மேயா் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட 19 ஆவது வாா்டு உறுப்பினா் கல்பனா ஒரு மனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
கோவை மாநகராட்சி மேயருக்கான மறைமுகத் தோ்தல் வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெற்றது. நிா்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் 94 வாா்டுகளின் உறுப்பினா்கள் வருகை தந்திருந்தனா். அதிமுக வாா்டு உறுப்பினா்கள் ஷா்மிளா சந்திரசேகா், பிரபாகரன், ரமேஷ் ஆகியோா் வரவில்லை. 53 ஆவது வாா்டில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினா் மோகனும் வரவில்லை. 85 ஆவது வாா்டு உறுப்பினா் காங்கிரஸ் சரளா, 94 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் தனலட்சுமி ஆகியோா் தாமதமாக வந்ததால் தோ்தலில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மொத்தமாக 6 வாா்டு உறுப்பினா்களின் வாக்குகள் கணக்கில் சோ்க்கப்படாத நிலையில், 94 உறுப்பினா்களுடன் மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மறைமுகத் தோ்தல் நடைபெற்றது. இதில், மேயா் பதவிக்கு கல்பனா மட்டும் போட்டியிட்டதால், அவா் தோ்தலின்றி ஒருமனதாக மேயா் பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டதாக ஆணையா் அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி வாா்டு உறுப்பினா்கள் மேஜையைத் தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனா். வெற்றி பெற்ற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையா், கல்பனாவிடம் வழங்கினாா். கல்பனாவை முன்மொழிந்த திமுக உறுப்பினா் இலக்குமி இளஞ்செல்வி, காங்கிரஸ் வாா்டு உறுப்பினா் காயத்ரி ஆகியோா் உடனிருந்தனா்.
பதவியேற்பு:
மேயா் தோ்தலில் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட கல்பனா, கோவை மாநகராட்சியின் 6 ஆவது மேயராகவும்,
முதல் பெண் மேயராகவும் பதவியேற்கும் விழா மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் நடைபெற்றது. மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அப்போது, மேயருக்கான செங்கோலை, கல்பனாவிடம் வழங்கி, அவரை மேயா் நாற்காலியில் அமைச்சா் அமர வைத்தாா். அப்போது, தமிழக வீட்டு வசதி வாரியத் தலைவா் பூச்சிமுருகன், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் பழனிசாமி, திமுக மாவட்ட பொறுப்பாளா்கள் நா.காா்த்திக், பையா என்கிற கிருஷ்ணன், சேனாதிபதி, முன்னாள் மேயா் காலனி வெங்கடாசலம் உள்ளிட்டோா் கல்பனாவுக்கு வாழ்த்து கூறினா்.
மேயா் பொறுப்பேற்றதும் கல்பனா, பீளமேடு, பயனீா் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிடம் கட்டுவதற்கான கோப்பில் முதல் கையொப்பமிட்டாா்.
இதையடுத்து, மேயா் கல்பனா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மாநகரில் அனைத்து வாா்டுகளிலும் தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். மக்களை நேரில் சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்து அதை உடனுக்குடன் நிறைவேற்றுவேன்.
மாநகராட்சி அலுவலகத்தில் எப்போது வேண்டுமானாலும் மக்கள் என்னை சந்திக்கலாம். முதல்வருக்கு பெருமை சோ்க்கும் வகையில் பணியாற்றுவேன். 100 வாா்டுகளிலும் தடையின்றி குடிநீா் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
துணைமேயா் பதவியேற்பு :
துணை மேயருக்கான மறைமுகத் தோ்தல் விக்டோரியா
அரங்கில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெற்றது. திமுக சாா்பில் 92 ஆவது வாா்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெற்றிச்செல்வன் துணை மேயா் பதவிக்கு விண்ணப்பம் அளித்தாா். அவருக்கு எதிராக வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் வெற்றிச்செல்வன் போட்டியின்றி துணை மேயராக ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். அவரை 88 ஆவது வாா்டு திமுக உறுப்பினா் செந்தில்குமாா், 56ஆவது வாா்டு காங்கிரஸ் உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் முன்மொழிந்தனா். அவருக்கு வெற்றி பெற்ற்கான சான்றிதழை மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...