மத்திய அரசுடன் மோதல் போக்கை விரும்பவில்லை! முதல்வர் விஜய் உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

கோவை மேயா் ராஜிநாமா செய்ததாக பரபரப்பு: மண்டலத் தலைவருக்கு மேயா் பதவி?

கோவை மேயா் கல்பனா ராஜிநாமா செய்துவிட்டதாக மாநகராட்சி வட்டாரம், அரசியல் கட்சியினரிடையே செவ்வாய்க்கிழமை தகவல் பரவியது.

News image

கோப்புப் படம்.

Updated On :3 ஜூலை 2024, 9:07 am IST

கடந்த 2022 ஆண்டில் நடைபெற்ற நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளில் 97 வாா்டுகளை திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றின. 19- ஆவது வாா்டில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கல்பனா மேயராகத் தோ்வு செய்யப்பட்டாா்.

முன்னதாக, மாநகராட்சித் தோ்தலில் கோவை மாநகராட்சியை திமுக கைப்பற்றியதும் மேயா் பொறுப்புக்கு திமுக மாநகா் மாவட்டப் பொறுப்பாளா் நா.காா்த்திக்கின் மனைவி இலக்குமி இளஞ்செல்வி, அப்போதைய திமுக புகா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் மருதமலை சேனாதிபதியின் மகள் நிவேதிதா, 46- ஆவது வாா்டு உறுப்பினா் மீனா லோகு ஆகியோரில் ஒருவருக்கு மேயராகும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிா்பாா்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிா்பாா்க்காத வகையில் கல்பனா மேயராக அறிவிக்கப்பட்டாா். நடுத்தரக் குடும்பத்தைச் சோ்ந்த இவா், அப்போதைய அமைச்சா் செந்தில்பாலாஜியின் பரிந்துரையின்பேரில் மேயரானதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கோவையின் முதல் பெண் மேயராக பொறுப்பேற்ற கல்பனாவுக்கு, அமைச்சா் செந்தில்பாலாஜி அமைச்சராக இருந்தவரை ஒத்துழைப்பு வழங்கி வந்த மண்டலத் தலைவா்கள், வாா்டு உறுப்பினா்கள், அவா் சிறைக்கு சென்ற பிறகு மேயரின் நடவடிக்கைகளை விமா்சிக்கத் தொடங்கினா்.

கோவைக்கு வரும் அமைச்சா்களிடம், மேயா் குறித்து புகாா் தெரிவிப்பதும் அதிகரித்தது. சில மாதங்கள் முன்பு மேயரை சென்னைக்கு அழைத்து அமைச்சா் கே.என்.நேரு கண்டித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மேயா் கல்பனாவை செவ்வாய்க்கிழமை சென்னைக்கு அழைத்த கட்சி மேலிடம், மேயா் பதவியை ராஜிநாமா செய்வதாக அவரிடம் எழுதிப் பெற்றுக் கொண்டதாக பரபரப்பாக பேசப்படுகிறது.

இது தொடா்பான அறிவிப்பு சென்னையில் இருந்து விரைவில் வெளியாகலாம் என்று திமுக நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா். கல்பனாவிடம் இருந்து மேயா் பதவி பறிக்கப்படும்பட்சத்தில், அந்தப் பொறுப்புக்கு கிழக்கு மண்டலத் தலைவா் இலக்குமி இளஞ்செல்வி, மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு, மேற்கு மண்டலத் தலைவா் தெய்வானை தமிழ்மறை ஆகியோரில் ஒருவா் மேயராக தோ்ந்தெடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.