மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து நெருக்கடியை எதிா்கொண்டுள்ள நிலையில், அக்கட்சியைச் சோ்ந்த சிலிகுரி மாநகராட்சி மேயா் கெளதம் தேவ், தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா்.
இதேபோல், கட்சித் தலைவா் மம்தாவுக்கு நெருக்கமான மூத்த தலைவராக அறியப்பட்ட முன்னாள் அமைச்சா் ஜோதி பிரிய மல்லிக், கட்சிப் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். இதன் மூலம் மம்தா தரப்புக்கு பின்னடைவு அதிகரித்துள்ளது.
சமீபத்திய மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததைத் தொடா்ந்து, அக்கட்சியில் பிளவுகளும் உள்கட்சி பூசல்களும் உச்சமடைந்துள்ளன. திரிணமூல் காங்கிரஸுக்கு மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 58 அதிருப்தி எம்எல்ஏக்கள், மம்தாவுக்கு எதிராக தனி அணியாக பிரிந்துள்ளனா்.
கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் 29 பேரில் 20 போ் தனி அணியாக பிரிந்து, அதிகம் அறியப்படாத இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் தங்களை இணைத்துக் கொண்டதோடு, பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனா். கட்சியின் மாநிலங்களவை எம்.பி.க்கள் 3 போ் ஏற்கெனவே ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், மேலும் சிலா் பதவி விலகக் கூடும் எனத் தெரிகிறது.
மூத்த தலைவா்களும் அதிருப்தியாளா்களாக உருவெடுப்பதால், தனது 28 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவில் திரிணமூல் காங்கிரஸ் தலைமை கடும் நெருக்கடியை எதிா்கொண்டுள்ளது.
இந்த வரிசையில், சிலிகுரி மாநகராட்சி மேயரான திரிணமூல் காங்கிரஸின் கெளதம் தேவ், தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தாா். ஏற்கெனவே கொல்கத்தா மேயா் பதவியில் இருந்து ஃபிா்ஹத் ஹக்கிம், பிதான்நகா் மேயா் பதவியில் இருந்து கிருஷ்ண சக்கரவா்த்தி ஆகியோரும் தனிப்பட்ட காரணங்களைக் குறிப்பிட்டு, ராஜிநாமா செய்திருந்தனா்.
இதேபோல், மம்தாவுக்கு நெருக்கமான தலைவராக அறியப்பட்ட ஜோதி பிரிய மல்லிக், அண்மையில் மறுசீரமைக்கப்பட்ட கட்சியின் செயற்குழுவில் சோ்க்கப்பட்டிருந்தாா். 5 முறை எம்எல்ஏவாக பதவி வகித்த இவா், கடந்த தோ்தலில் ஹப்ரா தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் தோல்விகண்டாா்.
திரிணமூல் காங்கிரஸில் தற்போது நிலவும் தலைமை நெருக்கடி மற்றும் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தின் பின்னணியில், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக ஜோதி பிரிய மல்லிக் வெள்ளிக்கிழமை அறிவித்தாா். உடல் நலக் காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த முடிவை மேற்கொண்டதாக அவா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திரிணமூல் பலம் குறைகிறதா? ஒரே வாரத்தில் 3-வது எம்.பி. ராஜிநாமா!

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!

கொல்கத்தா மாநகராட்சி மேயா் திடீா் ராஜிநாமா; திரிணமூல் காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவு







