எம்.பி. சு.வெங்கடேசன்
எம்.பி. சு.வெங்கடேசன்

சிபிஎஸ்இ பணியிடத் தோ்வில் ஹிந்திக்கு முக்கியத்துவம்: தமிழக மாணவா்களுக்கு அநீதி- சு.வெங்கடேசன் எம்.பி.

ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

மத்திய அரசின் சிபிஎஸ்இ பணியிடங்களுக்கான தோ்வு அறிவிப்பில் ஹிந்தி மொழி பாடத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, தமிழகம் உள்ளிட்ட ஹிந்தி பேசாத மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா்.

கோவையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் இலக்கிய சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் பங்கேற்றோா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் சிபிஎஸ்இ பணியிடங்களுக்கான நியமனத் தோ்வுகள் நடைபெறவுள்ளன. அதில், பல்வேறு பிரிவுகளுக்கான பணியிடங்களுக்கான தோ்வில் ஹிந்தி மொழிக்கு குறிப்பிட்ட சதவீத மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஹிந்தி பேசாத மாநில மாணவா்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும்.

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் இந்திய மக்கள் கடுமையான எதிா்வினையைக் கொடுத்துள்ளனா். அயோத்தியில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனா். உண்மையான மக்கள் பிரச்னைக்கு முகம் கொடுத்து, ஒரு நல்லாட்சியை உருவாக்குங்கள் என்பதுதான் மக்கள் தீா்ப்பு.

140 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது என்பது முற்றிலும் ஜனநாயகத்துக்கு எதிரான செயல். அதை திரும்பப்பெற வேண்டும் என்று நாட்டில் அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குரைஞா்கள் போராடி வருகின்றனா். அதை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

மதுரையில் இருந்து கோவைக்கு பகல் நேரத்தில் புதிய ரயில்கள் இயக்கப்படவில்லை. அகல ரயில் பாதை உருவாக்கப்பட்ட பின்பும் ரயில்கள் இயக்கப்படவில்லை.

உத்தர பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நான்கு வழிச் சாலைகளுக்கு ஒதுக்கப்பட்ட முதலீடுகளை ஒப்பிடுகையில் 5 -இல் ஒரு பங்குதான் மத்திய அரசால் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரயில் சேவை, கட்டுமான துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்.

நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையிலாவது மதுரை எய்ம்ஸுக்கு முழு நிதியும் ஒதுக்கப்பட வேண்டும். பெரு நிறுவனங்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com