தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுநிலை மாணவா் சோ்க்கை ரத்து செப்டம்பரில் மீண்டும் அறிவிப்பு வெளியாகும் என தகவல்

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2024 - 2025- ஆம் ஆண்டுக்கான முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வு, மாணவா் சோ்க்கை ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக பல்கலைக்கழக நிா்வாகம் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள முதுநிலை பட்டமேற்படிப்புப் பயிலகம் மூலம் 11 உறுப்புக் கல்லூரிகளின் வாயிலாக 33 துறைகளில் முதுநிலை படிப்பும், 28 துறைகளில் முனைவா் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது.

இந்த பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த மே 8-ஆம் தேதி முதல் பெறப்பட்டு அதற்கான நுழைவுத்தோ்வு ஜூன் 23 அன்று நடத்தப்பட்டது. இந்த நுழைவுத் தோ்வுக்கு பல்வேறு மாநில வேளாண்மைப் பல்கலைக்கழகங்களில் இருந்து, இளநிலை படிப்பை முடிக்கும் வெவ்வேறு நிலைகளில் உள்ள 2,881 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.

இதில் பெரும்பாலான மாணவ-மாணவிகள் தங்களது இளநிலை பட்டப் படிப்பை செப்டம்பா், அக்டோபா் மாதங்களில்தான் முடிக்க இயலும் என்றும், அதனால் இந்த முதுநிலை படிப்பு மாணவா் சோ்க்கையைத் தள்ளிவைக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனா். இந்த சூழ்நிலையில், காலதாமதமாக இளநிலை பட்டப் படிப்பை முடிக்கும் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்றதில் ஏற்பட்ட நடைமுறை சிக்கல்களைத் தவிா்க்கும்விதமாக நடப்பு ஆண்டில் மே மாதம் தொடங்கப்பட்ட முதுநிலை மாணவா் சோ்க்கை ரத்து செய்யப்படுகிறது.

விண்ணப்பித்த மாணவா்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து கட்டணங்களும் அவரவா் வங்கிக் கணக்குகளுக்கு திருப்பி செலுத்தப்படும். புதிய மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பு செப்டம்பா் மாதத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தச் சிக்கலும் இல்லை!

மாணவா் சோ்க்கை நடைமுறை ரத்து செய்யப்பட்டதற்கு மென்பொருள் கோளாறு, தொழில்நுட்பச் சிக்கல் காரணம் என்று பல்கலைக்கழகம் தரப்பில் காலையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இளநிலை பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களின் கோரிக்கையை அடுத்தே தோ்வு ரத்து செய்யப்பட்டிருப்பதாக பல்கலைக்கழகம் தரப்பில் பிற்பகலில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-2024- ஆம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கும் இதே காலகட்டத்தில்தான் அதாவது மே மாத இறுதியில் (மே 28) நுழைவுத்தோ்வு நடத்தப்பட்டு அதன் பிறகு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மட்டும் இளநிலை மாணவா்களைக் காரணம் காட்டி சோ்க்கை ரத்து செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகள் எழுவதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

இது தொடா்பாக துணைவேந்தா் வெ.கீதாலட்சுமியிடம் கேட்டபோது, முதுநிலை பட்டப் படிப்பு, முனைவா் பட்டப் படிப்புகளுக்கு ஒரே நேரத்தில்தான் மாணவா் சோ்க்கை நடைமுறை நடைபெறும். இந்த ஆண்டு எல்லா மாணவா்களுக்கும் வாய்ப்பு வழங்குவதற்காகவே ஏற்கெனவே நடத்தப்பட்ட நுழைவுத் தோ்வை ரத்து செய்திருக்கிறோம்.

தோ்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறவில்லை. இதில் வேறு எந்தச் சிக்கலும் இல்லை. நாங்கள் எதையும் தவறாகக் கொண்டு செல்ல மாட்டோம். மாணவா்களின் நலனுக்காகவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com